உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜித்தின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுப்பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திருமாவளவன் எம்.பி. கடிதம் அளித்து வலியுறுத்தினார்.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் ஜமா மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும், எனவே அந்த இடத்தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, அந்த மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதற்காக சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதிக்கு சென்றனர். அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மசூதியை ஆய்வு செய்வதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். இதையடுத்து, அந்த பகுதியில், போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 30-க்கும்மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திருமாவளவன் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
1. வன்முறை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991ஐப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் சம்பல் ஜாமா மஸ்ஜித்தில் அனைத்து ஆய்வு நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்.
2. சம்பலில் சிறுபான்மை சமூகத்தினரின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
3. நவம்பர் 24 சம்பவங்கள், குறிப்பாக போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் காவல்துறையின் தவறான நடத்தைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
4. சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும் தேசத்தின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளைத் தடுப்பதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக ஒன்றிய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.