திமுக அரசு தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்- சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், “இவற்றை தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா?” என்ற அச்சமிகு கேள்வியை மக்களிடத்தில் எழுப்புகின்றன.
தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கும் மு.க. ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இக்கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது செயல்படுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழக அரசு, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரணம் தமிழகத்தில் முதியோருக்கு பாதுப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர்- பல்லடம் அருகே 3 பேரை வீடு புகுந்து கொலை செய்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோட்ட வீட்டில் இருந்த முதியவர் உட்பட 3 பேரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, நகை பணத்தை கொள்ளை அடித்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தில் முதியோர்களுக்கு மிகுந்த அச்சத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளதால் தான் இதுபோன்ற தொடர் குற்றச்செயல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பல மாவட்டங்களில் ஆங்காங்கே கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, முதியோர் கொலை போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதற்கு காரணம் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கில் கவனமின்மையே. இதற்கெல்லாம் அடித்தளம் டாஸ்மாக், போதைப்பொருள் கலாச்சாரம் தான். இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு சட்டம் ஒழுங்கில் மேலும் கவனம் செலுத்த வேண்டும். கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது சட்டம் ஒழுங்கின் அலட்சியத்தையே எடுத்துக்காட்டுகிறது.
தமிழக அரசு, குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டுபிடிப்பதற்கும், அவர்களுக்கு உரிய தண்டனை, காலம் தாழ்த்தாமல் கிடைப்பதற்கும் தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். எனவே தமிழக அரசு முதியோர் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் வகையில் சட்டம் ஒழுங்கு உட்பட பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.