சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல், காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று, நாளையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் ஓட்டல்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நடவடிக்கைகளை குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பேட்டி அளித்த துணை முதலமைச்சர் கூறுகையில், மதியம் 3 மணி நிலவரப்படி எந்தெந்த பகுதிகளில் மழையால் தண்ணீர் தேங்கியுள்ளது, நிவாரண முகாம்கள் செயல்படும் விதம், பொதுமக்களின் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு அறைக்கு வருகிற அழைப்புகளின் விவரம் உள்ளிட்டவை குறித்து, அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம். மேலும், புயல் கரையை கடக்கும் போதும், அதற்கு பின்னரும் தொடர்ந்து கண்காணித்து, மக்களை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்களை வழங்கினோம். என்று கூறியுள்ளார். அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.