மத்திய, மாநில அரசுகள் நிலமற்ற பழங்குடியினருக்கு நிலம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தினார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நான்கு நாட்கள் பயணமாக கடந்த 27-ம் தேதி நீலகிரி மாவட்டம் வந்தார். உதகை ராஜ்பவனில் தங்கியுள்ள அவர் வியாழக்கிழமை வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை உதகை ராஜ்பவனில் நீலகிரி மாவட்டத்தில் வாழும் 6 பண்டைய பழங்குடியின மக்களை சந்தித்தார். அப்போது, பண்டைய பழங்குடியினர் நலச்சங்க தலைவர் ஆல்வாஸ் மற்றும் பழங்குடியின பிரதிநிதிகள் தங்கள் மக்களின் சமூக, பொருளாதார நிலை மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கினர்.
பின்னர், அவர்கள் மத்தியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியதாவது:-
இந்தியாவில் 700 பழங்குடியினங்கள் உள்ளன. இதில், 75 பழங்குடியினங்கள் பண்டைய பழங்குடிகளாவர். நீலகிரி மாவட்டத்தில் 6 பண்டைய பழங்குடியினர் வாழ்கின்றனர். நானும் பழங்குடியினத்தை சேர்ந்தவள் என்பதால் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை நன்கு அறிவேன்.
இந்திய அரசு அனைவருடன், அனைவரது வளர்ச்சி என்ற கோட்பாட்டை அறிவித்து செயலாற்றி வருகிறது. இதில், பழங்குடியினர் பின்தங்கியுள்ளனர். அவர்களின் முன்னேற்றம் தான் இந்த கோட்பாட்டை முழுமை பெற செய்யும். நீலகிரி மாவட்ட பழங்குடியினர் கல்வியறிவு பெற்று முன்னேறி வருகின்றனர்.
தமிழக அரசு பழங்குடியினர் முன்னேற்றத்துக்கு முயற்சி செய்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பழங்குடியினருக்கு வழங்கும் திட்டங்கள் குறித்து பழங்குடியின மக்களுக்கு முழுமையாக தெரியவில்லை. இந்த திட்டங்கள் பழங்குடியின மக்களுக்கு சென்றடைய முயற்சி செய்ய வேண்டும்.
பண்டைய பழங்குடியின மக்களுக்கு நிலம் இல்லை. வனம் தங்களது வீடு, இந்த உலகமே கடவுள் அளித்தது என வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தங்கள் பெயரில் நிலத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை. இதனால், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், இம்மக்களுக்கு வீடுகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு இந்திய அரசு பழங்குடியினருக்காக வன உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. மத்திய, மாநில அரசுகள் நிலமற்ற பழங்குடியினருக்கு நிலம் வழங்க வேண்டும். மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினருக்கு நிலம் மற்றும் வீடு கட்ட கூடுதல் நிதி அளிக்க நிதி ஆயோக்கை நான் வலியுறுத்தி உள்ளேன். பழங்குடியின மக்கள் திறன் வாய்ந்தவர்கள். அவர்களின் முன்னேற்றத்துக்கு அரசுகள் பாடுபட வேண்டும். அவர்களின் முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உடனிருந்தனர். குடியரசுத் தலைவர் தனது நான்கு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று காலை 10 மணியளவில் உதகையிலிருந்து புறப்பட்டு டெல்லி திரும்புகிறார்.