அரசு மருத்துவமனை பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா பொருத்திய பயிற்சி மருத்துவர் கைது!

பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அலுவலகத்தில் பெண்கள் பயன்படுத்தும், கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் செவிலியர்கள் பயிற்சி செவிலியர்கள் அலுவலக ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

மருத்துவமனை நிர்வாக அலுவலகத்தில் செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் அலுவலகப் பெண்கள் பயன்படுத்தும் பொது பெண்கள் கழிப்பறை உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெண் செவிலியர் ஒருவர் கழிப்பறைக்கு சென்றபோது, அங்குள்ள கழிப்பறை சுத்தம் செய்யும் பிரஸ்ஸில் ரப்பர் பேண்ட் சுத்தப்பட்ட நிலையில் ரகசிய பேனா கேமரா இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். இருப்பிட மருத்துவர் மாரிமுத்து மற்றும் பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோர் உடனடியாக கழிப்பறைக்குச் சென்று பார்த்த போது, அங்கு செவிலியர்கள் கூறிய பிரஸ்ஸில் ரகசிய கேமரா இருந்துள்ளது. இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா கடந்த 28-ம் தேதி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிரிஷ்டி சிங் தலைமையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், நிர்வாக அலுவலகத்தில் உள்ள பெண்கள் பொது கழிப்பறைக்கு அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வரும் வெங்கடேஷ் (33) என்பவர் சம்பவம் நடந்த போது பிரஷில் இருந்த ரகசிய கேமராவில் இருந்த மெமரி கார்டை எடுத்துள்ளது தெரிய வந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கீழ்குப்பம் பனமரத்துப்பட்டி பகுதியை சார்ந்த மருத்துவர் வெங்கடேஷ் (33). தற்போது கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எம்.எஸ்.ஆர்த்தோ பயின்று வருகிறார். பயிற்சியின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக பயிற்சி பெற்று வருகிறார்.

இதையடுத்து மருத்துவர் வெங்கடேஷிடம் நடத்திய விசாரணையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அமேசான் ஆன்லைன் செயலியில், ரகசிய பேனா கேமராவை வாங்கி கழிவறை சுத்தம் செய்யும் பிரஸ்ஸில் பொருத்தி வைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மருத்துவர் வெங்கடேசன் மீது வழக்கு பதிந்து கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து மொபைல்போன் மற்றும் மெமரி கார்டு ஆகியவற்றை கைப்பற்றினர். மருத்துவர் வெங்கடேசை நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர்.