ஃபெஞ்சல் புயலால் பெரிய பாதிப்பு இல்லை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்!

ஃபெஞ்சல் புயல் தொடர்பாக சென்னையில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய பாதிப்பு இல்லை என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பெருமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் சென்னையின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. சென்னை முழுவதும் மழை வெள்ள மீட்புப் பணிகளில் 22 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும், போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை தொடர்வதாகவும் அரசு தெரிவித்துள்ளது. மழை நீர் புகுந்த மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 2 லட்சத்திற்கு அதிகமானோருக்கு உணவு தயாரித்து பரிமாறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

முந்தைய புயல்களை போன்று இந்த புயலில் பெரிய பாதிப்பு இல்லை. சென்னையில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் மிகப்பெரிய பாதிப்பு இல்லாத சூழலை உருவாக்கி இருக்கிறது.மரக்காணத்தில் 22 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. 144 நிவாரண மையங்களில் 4904 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள 7 சுரங்கப் பாதைகளில் இன்றிரவுக்குள் தண்ணீர் அகற்றப்படும்

மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும்.சென்னையில் மழைப்பொழிவு குறைந்துவருகிறது. எனினும், தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெறும். அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு இதுவரை 2,648 புகார்கள் வந்துள்ளன. இதில் 2000க்கும் மேற்பட்ட புகார்கள் தீர்வு காணப்பட்டது.

வானிலை ஆய்வு மையம் சரியான முறையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதும் உரிய தகவல்களை எங்களுக்கு வானிலை மையம் கொடுத்தது. மின்சாரம் துண்டிப்பு புகார்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது. இயற்கையை மீறி ஒன்றும் செய்ய முடியாது. பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.