சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம்: மு.க. ஸ்டாலின்!

“தூங்கி வழிந்த நிர்வாகத்தால் – மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம்” என மழை தொடர்பான எடப்பாடியின் தொடர் விமர்சனங்களுக்கு பதிலடியாக முதல்வர் மு.க ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-

தூங்கி வழிந்த நிர்வாகத்தால் – மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம். இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது திராவிட மாடல் ஆட்சிக்காலம்.

இயல்புநிலை திரும்பிய பகுதிகளைப் பார்வையிட்டபோது, மக்களின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு, விழுப்புரம் – திண்டிவனம் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்யக் களத்தில் பணியாற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருந்த சமூக வலைதளப் பதிவில், “மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இனி இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை.” என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து அவர் இது தொடர்பான விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், இன்று முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில், “தூங்கி வழிந்த நிர்வாகத்தால் – மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம்” எனப் பதிவிட்டுள்ளார்.