2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சீமானின் கட்சி தமிழ்நாட்டில் இருக்காது: நாஞ்சில் சம்பத்!

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் சீமானின் கட்சி தமிழ்நாட்டில் இருக்காது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

கடந்த வாரம் ரஜினிகாந்த்தைச் சீமான் சந்தித்த விவகாரம் அரசியல் வட்டத்தில் ஒரு திடீர் திருப்பமாகச் சொல்லப்பட்டது. விஜய் அரசியல் வருகையை ஒட்டியே இந்த இருவரும் சந்தித்துள்ளனர் என்று சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். கிட்டத்தட்ட 2 மணிநேரம் நடத்த இந்தச் சந்திப்பு பற்றி உடன் இருந்த ரவீந்திரன் துரைசாமி விளக்கம் அளித்திருந்தார். வரும் காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய இந்தச் சந்திப்பு நடந்தது எனச் சிலர் சொன்னார்கள். திமுக ஆதரவாளர்கள் சீமானை சங்கி என கூறி வருகின்றனர். அதற்கு சீமான், ‘சங்கி என்றால் நண்பன்’ என்று அர்த்தம் என்று விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் சீமான் மற்றும் ரஜினி ஆகிய இருவரின் சந்திப்பு பற்றி படுமோசமாக நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் பலரது கவனத்தைப் பெற்று வருகிறது. நாஞ்சில் சம்பத் கூறியுள்ளதாவது:-

ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குக் கூட வரமுடியவில்லை. கட்சியில் உள்ள நிர்வாகிகளைத் தக்கவைக்க முடியவில்லை. இவர் ஆட்சியைப் பிடிப்பாரா? மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அலை அலையாக ஆட்சியை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இவர் ஆட்சியைப் பிடிப்பாரா? சீமானே பெரிய சங்கி. அவர் போய் ரஜினி என்ற சிங்கியைச் சந்திக்கிறார். பாஜகவை எதிர்ப்பதாகச் சொல்லும் சீமான், வக்பு வாரிய சட்டத்தில் மோடி திருத்தம் கொண்டுவருகிறார். அதைக் கண்டித்துப் பேசச் சொல்லுங்கள் பார்ப்போம். பொதுசிவில் சட்டத்தை எதிர்த்துப் பேச சொல்லுங்கள் பார்ப்போம்.

சீமான் ஏற்கெனவே பாஜக கைக்கூலிதான். ஆகவே, போய் ரஜினியைச் சந்திக்கிறார். இதில் என்ன பெரிய செய்தி இருக்கப் போகிறது? ரஜினி சினிமா சூப்பர் ஸ்டாராம்? சீமான் அரசியல் சூப்பர் ஸ்டாராம்? சீமான் இதுவரை ஒரு தொகுதியில் எங்காவது ஜெயித்து இருக்கிறாரா? 8% வாக்குப் பெற்று கட்சிக்கு அங்கீகாரம் பெற்றுவிட்டது பெரிய விசயமா? 38 தொகுதிகளில் ஒருவர் தமிழ்நாட்டில் ஜெயித்தார் தெரியுமா? அவர் யார் என்று சீமானுக்கு தெரியுமா? அவர் பெயர் கருப்பையா மூப்பனார். அந்தக் கட்சி பெயர் தமிழ் மாநில காங்கிரஸ். அந்தக் கட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிறதா? 38 தொகுதிகளில் வென்ற கட்சியே தமிழ்நாட்டில் காணாமல் போய்விட்டது? சீமான் 8% வாக்குகள் வாங்கிவிட்டால் பெரிய கட்சியாகிவிட முடியுமா? சீமான் ஒரு அரசியல் தலைவரா? அந்தத் தகுதி இருக்கிறதா?

சீமானே கட்சித் தலைவர் என்று சொல்லவில்லையே? ஒருங்கிணைப்பாளர் என்றுதானே சொல்கிறார். ஒருங்கிணைப்பாளர் என்றால் என்ன அர்த்தம்? காங்கிரசுடன் கூட்டணி வைக்கமாட்டேன். அதை ஒழிப்பதுதான் கொள்கை என்கிறார் சீமான். காங்கிரஸ் சீமானிடம் கூட்டணி வைக்க விண்ணப்பம் போட்டதா? வேறு மாநிலத்திற்குப் போய் பிரியங்கா காந்தி தேர்தலில் நின்று 4.5 லட்சம் வாக்கு வாங்கி வெற்றி பெற்றுவருகிறார். அந்தக் கட்சியும் சீமான் கட்சியும் ஒன்றா?

தம்பி விஜய் கூப்பிடுவார் என்று காத்துக் கொண்டிருந்தார் சீமான். அவர் கூப்பிடவே இல்லை. கடைசியில் விஜய்யை எதிர்க்கிறார். சீமானால் யாருக்கும் லாபமும் இல்லை. சொல்லப் போனால் விஜயலட்சுமிக்கே ஒரு லாபமும் இல்லையே? விஜய்க்கு எப்படி லாபம் இருக்கும்? தனித்து நிற்பேன் எனச் சொல்லும் சீமானின் கட்சி 2026இல் தமிழ்நாட்டிலேயே இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.