அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இன்றி திறக்கப்பட்டதாக குறை சொல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணையை திறந்து விட்டது ஏன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட செஞ்சி ரோடு, எம்ஜிஆர் நகர், நாகலாபுரம் குளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு இடங்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான அத்தியாசியப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அன்புமணி. அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு சென்னையை மட்டும் மையமாக வைத்து மழை தடுப்புப் பணிகளை மேற்கொண்டது. ஆனால் சென்னையில் வெறும் பத்து சென்டிமீட்டர் அளவுக்கு தான் மழை பெய்தது. மற்ற மாவட்டங்களை தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து முன்னேற்பாட்டு பணிகளை செய்யவில்லை. திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 51 செண்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டின் ஓராண்டின் சராசரி மழையளவு 950 மில்லி மீட்டர் அதில் பாதி அளவு மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு இன்னும் தீவிரமான மீட்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது பொதுமக்கள் வீடுகளை இழந்து இருக்கிறார்கள் கால்நடைகளை எழுந்திருக்கிறார்கள் இந்த கணக்கெடுப்பு பணிகளை எல்லாம் விரைவாக நடத்தி உரிய இழப்பை தமிழக அரசு கொடுக்க வேண்டும். மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று காரணம் சொல்லக்கூடாது. தமிழக அரசு ஒரு ஆண்டுக்கு 4 லட்சம் கோடி ரூபாயில் பட்ஜெட் போடுகிறது. எனவே எதிர்பாராத மழை வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு தேவையான நிதியை முறையாக ஒதுக்க வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் பல உயிர்கள் பறிபோனதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ட்வீட் போட்டுள்ளார். ஆனால் திமுக ஆட்சியில் அவ்வாறு கிடையாது எனவும் பதிவிட்டுள்ளார். ஆனால் முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணை அதிகாலை 2 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து ஒரு வினாடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டதால் கடலூரில் நகரத்தில் 90 சதவீத வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. உயிர்சேதம் பற்றி இன்னும் முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. தென்பெண்ணை ஆற்று படுகை ஓரங்களில் முழுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் மக்களுக்கு முன்கூட்டியே முறையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் தமிழக முதலமைச்சர் கடந்த அதிமுக ஆட்சியை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். அதிமுக திமுக என இரண்டு கட்சிகளையும் தான் நாங்கள் குறை சொல்கிறோம்.
விழுப்புரம் மாவட்டம் அரசூரில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது, இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் இல்லாததால் கைபேசியை பயன்படுத்த முடியாமல் அவதியுற்று வருகின்றனர். மரக்காணத்தில் மட்டும் 5000 ஏக்கர் விலை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த விழுப்புரத்தில் 50,000 ஏக்கர் நெல் பயிரிடப்பட்ட நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.