பெஞ்சல் புயலால் விழுப்புரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் பொன்முடி நேரில் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பெஞ்சல் புயலால் காரணமாகக் கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. புயல் கரையைக் கடந்த பிறகும் சில நாட்கள் வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் வடதமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் பாதிப்புகள் மிக மோசமாகவே இருந்தது. அங்கு பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்கியது. வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இருவேல்பட்டு பகுதியில் ஆய்வு செய்ய அமைச்சர் பொன்முடி இன்று காலை அங்குச் சென்றார். அவரது மகனும், கள்ளக்குறிச்சி முன்னாள் எம்பியுமான கவுதம சிகாமணி, விழுப்புரம் கலெக்டர் பழனி உள்ளிட்டோரும் அங்குச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது சிலர் சேற்றை வாரி இறைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
அந்த பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளம் வடியத் தொடங்கியவுடன் அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்க அமைச்சர் பொன்முடி அங்குச் சென்றிருந்தார். அந்த இடத்தில் குறிப்பிட்ட கட்சியின் அரசூர் மகளிரணியைச் சேர்ந்த விஜயராணியும் அவரது உறவினர் ராமர் என்பவரும் வேண்டும் என்றே உள்நோக்கத்தோடு அவர் மீது சேற்றை வாரி இறைத்துள்ளனர். ஒரு பக்கம் நிவாரணம் எதுவும் நடக்கவில்லை என்று பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். மறுபுறம் இப்படி மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவோரை அச்சுறுத்துகிறார்கள். அவர்களின் பணிகளைத் தடுக்கிறார்கள். ஆனால், இது எங்களுக்குப் புதிது இல்லை. இதுபோன்ற பல தடைகளைத் தாண்டி வளர்ந்த இயக்கம் தான் திமுக. இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்.. மக்கள் பணிகளைத் தொடர்ந்து செய்வோம். அதைக் காட்டும் வகையிலேயே அமைச்சர் பொன்முடி தொடர்ந்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்” என்றார்.
பெஞ்சல் புயலால் 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, முதல்வர் எடுத்த துரித நடவடிக்கையால் தான் சென்னை வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும் குறிப்பிட்டார். வெள்ள பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்றிய தமிழகத்தைக் காக்கும் கடவுளாகவே முதல்வர் காட்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மோசமான சூழலில் ஆளும் கட்சிக்கு உறுதுணையாக இருக்காமல் வஞ்ச சூழ்ச்சிகளை எதிர்க்கட்சிகள் அள்ளி வீசுவதாக விமர்சித்த அவர், எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சாத்தனூர் அணை தொடர்பாகப் பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் தான் சொல்லாமல் நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டார்கள். இதனால் 250 பேர் உயிரிழந்தனர். ஆனால், திமுக ஆட்சியில் அப்படி இல்லை. சாத்தனூர் முன்னெச்சரிக்கை இல்லாமல் திறக்கப்படவில்லை.. நவ. 25 முதலே பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, படிப்படியாகவே நீர் திறந்து விட்டப்பட்டது. முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்படுகிறது. இதன் காரணமாகவே உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த புயலின் தாக்கத்தை வானிலை மையத்தால் கூட துல்லியமாக கணக்கிட முடியவில்லை.. அனைத்திற்கும் அப்பாற்பட்டது தான் இயற்கை என்பது நிரூபணம் ஆகிவிட்டது” என்றார்.