தமிழகம், கேரளாவை மத்திய அரசு வஞ்சிக்கிறது: சபாநாயகர் அப்பாவு!

“தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு எவ்வித நிவாரண நிதியும் வழங்கவில்லை” என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் நேரு யுவகேந்திரா சார்பில் நடந்த இளைஞர் கலைவிழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஆண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டனர். ஆனால், இதுவரை எந்த நிதியும் வழங்கப்படவில்லை. கடந்த அக்டோபர் 1-ம் தேதி வரை இந்திய அளவில் 14 மாநிலங்கள் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதில் குஜராத்துக்கு ரூ.600 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.1,492 கோடி, ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி வழங்கப்பட்டது. ஆனால், தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை. தமிழகம், கேரளா தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கும் இதுவரை நிதி வழங்கப்படவில்லை. அனைவருக்கும் கல்வித் திட்டத்திலும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி தரவில்லை. தமிழகத்தை சேர்ந்தவர்தான் நிதி அமைச்சராக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து தமிழகத்தை ஏன் வஞ்சிக்கின்றனர் என தெரியவில்லை. தமிழகத்தில் தற்போது புயல் காரணமாக மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் 26 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பிரதமரும், மத்திய நிதியமைச்சரும் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் குஜராத் பகுதியில் நடந்த அநீதியை படமாக எடுத்துள்ளனர். அதைப் பார்க்க ஆர்வம் காட்டினர். ஆனால், தமிழகத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு ட்வீட் செய்து கூட அனுதாபம் தெரிவிக்க வரவில்லை.

தமிழக முதல்வர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே மக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கி நிவாரண முகங்களில் தங்க வைத்தார். ஆனால், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எந்த ஓர் முன்னறிவிப்பும் இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது. நீர்வளத் துறை மூலம் 5 முறை முன்னறிவிப்பு செய்த பின்னரே சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.