பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகை போதாது என்றும் ரூ.10,400 அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததுள்ளது. இந்த நிலையில், கடலூர் மற்றும் விழுப்புரத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டார்.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகை போதாது என்றும் ரூ.10,400 அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
கடலூரில் ஏற்பட்டுள்ள புயல் வெள்ளத்தால் விவசாய பயிர்கள், வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமாக மழை வந்து விட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். அரசு எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது என்பது தான் எங்களுடைய கேள்வி. சாத்தனூர் அணையை திறந்து விட்ட பிறகுதான், இந்த பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணிக்கு 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடியை திறந்து விட்டு பெரிய பாதிப்பை மாநில அரசே ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கப்பட்டது. நகரமாக இருந்தாலும், கிராமங்களாக இருந்தாலும் பாதிப்பு ஒன்று தான். கிராமங்களில் இன்னும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சென்னையை விட அதிக மழை பெய்ததுள்ளது. அப்படி இருக்கும் போது ஒரு ரேஷன் காருக்கு 2 ஆயிரம், ஒரு ரேஷன் கார்டுக்கும் 6 ஆயிரம்.. எப்படி அது நியாயம். எனவே ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரத்து 400 வரை கொடுக்க வேண்டும். மத்திய அரசு விதிளின் படி கணக்கிட்டு பார்த்தால் ரூ.10,400 கொடுக்க வேண்டும். முதல்வர் கிராமப்புற பகுதிகளுக்கு வரவேண்டும். வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளுக்கு அமைச்சர்கள் வர வேண்டும். கிராமப்புற பகுதிக்கு வந்தல்தால் எந்த அளவு சேதாரம் இருக்கிறது என்று தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
பெஞ்சல் புயலில் பாதிப்புக்குள்ளான, கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூருக்குச் சென்று, பொதுமக்களை நேரில் சந்தித்துப் பேசினோம். வெள்ள பாதிப்பிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்பத் தேவையான நடவடிக்கைகளை, தமிழக பா.ஜ.க. சார்பாக மேற்கொள்வோம் என்று ஆறுதல் தெரிவித்து, அந்தப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு, நிவாரணப் பொருட்களை வழங்கினோம்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம் அனுமந்தை கிராமத்தில், பெஞ்சல் புயலால் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்துப் பேசினோம். இந்தப் பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மூழ்கியிருக்கும் நெற்கதிர்களை, வெள்ளத்திற்குள் இறங்கி எடுத்துக் காட்டிய விவசாயிகளின் மனவேதனையைப் புரிந்து கொள்ள முடிகிறது. பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு, தமிழக பா.ஜ.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தோம். இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.