களத்தில் நின்று மக்களைக் காக்கும் பணி தொடரும்: முதல்வர் ஸ்டாலின்!

களத்தில் நின்று மக்களைக் காக்கும் கட்சியின் பணி தொடரும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:-

பென்சல் புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டெழ அரியலூர் மாவட்டத்தின் சார்பில் அமைச்சர் சிவசங்கர் 25,000 உணவுப் பொட்டலங்கள், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் தா.மோ. அன்பரசன் 1 லட்சம் கிலோ அரிசி உள்ளிட்ட உதவிகள், நிவாரணப் பொருள்கள் அண்ணா அறிவாலயம் சார்பில் வழங்கப்பட்டது.

இன்று சென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்பாட்டில் 1.5 லட்சம் கிலோ அரிசி ஏற்றிய வாகனங்களை அண்ணா அறிவாலயத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தோம். மேலும், எனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினேன். களத்தில் நின்று மக்களைக் காக்கும் கட்சியின் பணி தொடரும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பென்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் இன்று (5.12.2024) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னுடைய ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை தலைமைச் செயலாளர் நா. முருகானந்தமிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.