வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் ஆவது பிரதமர் மோடி நேரில் வர வேண்டும் என்று இண்டியா கூட்டணியைச் சேர்ந்த அம்மாநிலத்தின் 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து இண்டியா கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி உட்பட மணிப்பூர் மாநிலத்தின் 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பிரதமர் மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர். அதில் மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் 2 ஆண்டுகளை நெருங்கும் நிலையில், தற்போது வரை ஒருமுறை கூட பிரதமர் ஆகிய தாங்கள் தங்களுடைய மாநிலத்திற்கு வருகை தந்து இயல்பு நிலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளனர்.
உலக நாடுகள் அனைத்திற்கும் ஆர்வமுடன் செல்லும் தாங்கள் பல நாடுகளின் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதாக சொல்லி கொள்ளும் தாங்கள் சொந்த நாட்டில் உள்ள ஒரு மாநிலம் வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை வருகை தராதது விந்தையாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், பதற்றம் மற்றும் அச்சத்துடன் உள்ளனர் என்றும் உதவிக்காக அவர்கள் காத்திருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையை எண்ணி பார்த்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஆவது மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் வருகை தந்து இயல்பு நிலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.