ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்!

மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது மத்திய வருவாய் துறை செயலராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. இதையடுத்து, டிசம்பர் 11 புதிய ஆளுநராக பதவியேற்கும் சஞ்சய் மல்ஹோத்ரா, 3 ஆண்டுகளுக்கு அப்பதவியை வகிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நியமன உத்தரவை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உடனடியாக ஒப்புதல் பெறவிருக்கிறது. அவரது நியமனத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டதும், மத்திய ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சஞ்சய் மல்ஹோத்ரா, 1990ஆம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸ் பதவிக் காலம் டிசம்பர் 10ஆம் தேதி (செவ்வாயன்று) நிறைவு பெறுவதையடுத்து, புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சக்திகாந்த தாஸ் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நாட்டின் 25வது ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்றார். அவரது மூன்று ஆண்டு கால பதவி நிறைவடைந்தபோது, அவருக்கு கூடுதலாக பணிக்காலத்தை நீட்டித்திருந்தது மத்திய அரசு.

சஞ்சய் மல்ஹோத்ரா ஐஐடி-கான்பூரில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றவர். பிறகு அமெரிக்காவில் உள்ள பல்கலையில் பொதுக் கொள்கைப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கடந்த 33 ஆண்டு காலத்தில், சஞ்சய் மல்ஹோத்ரா மத்திய அரசின் எரிசக்தி, நிதி, வரித் துறை, தகவல் தொடர்பு மற்றும் சுரங்கத் துறை என பல துறைகளில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

நிதி மற்றும் வரி விதிப்பில் பல ஆண்டு கால அனுபவம் கொண்டவர் சஞ்சய். நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு முறையின் வரிக் கொள்கைகளை உருவாக்கியதில் சஞ்சய் மல்ஹோத்ராவின் பங்கு மிக முக்கியமாக அமைந்திருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.