ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யபட்டுள்ளது. அரசியல் சாசன 67 (பி)-ன் கீழ் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
நடப்பு கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கும், ஜக்தீப் தன்கருக்கும் இடையே தினமும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதானி முறைகேட்டை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பதாக கூறி ஜக்தீப் தன்கர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதேவேளையில், நேற்று அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டை எழுப்ப ஆளுங்கட்சி எம்பிக்களுக்கு அனுமதி கொடுத்தார். இதனால், எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். எனவே ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து அவரை நீக்க எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை தாக்கல் செய்தனர். எதிர்க்கட்சி எம்பிக்கள் போதிய எண்ணிக்கை இல்லாததால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும் என்று கூறப்படுகிறது.