தமிழனுக்கு முட்டாள் பட்டம் கட்டுவதை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: இந்து முன்னணி!

தாத்தா, மகன், பேரன் என அரசியல் குலத் தொழில் செய்யும் திமுகவும், அதன் தலைவர் குடும்பமும் விஸ்வகர்மா திட்டத்தை குலக் கல்வி என ஏளனம் செய்வதுதான் வேடிக்கையானது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் சேத்துபட்டு மெட்ராஸ் கிறிஸ்டியன் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அங்கு பேசும்போது கிறித்தவர்கள் பங்களிப்பால் தான் சமூகநீதி தமிழகத்தில் வாழ்கிறது என்றும், மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றி குலக் கல்வியை ஏற்படுத்த மத்திய அரசு விஸ்வகர்மா திட்டத்தை அமல்படுத்தி உள்ளது எனவும் பேசியுள்ளார். இது அப்பட்டமான பொய், புரட்டு மற்றும் அநாகரிகமான பேச்சு. இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

ஆங்கிலேயன் வருவதற்கு முன் தமிழகத்தில் எத்தனை பள்ளி கூடங்கள் இருந்தது. அதில் அனைத்து சமூகத்தின் மாணவர்களுக்கும் பாகுபாடின்றி கல்வி கற்றுத்தரப்பட்டது என்பது குறித்து காந்திஜியின் சீடர் திரு.தரம்பால் அவர்கள் ஆங்கிலேயன் திரட்டி வைத்த தகவல்களை கொண்டு ஒரு பெரிய புத்தகமே எழுதியுள்ளார். அது தமிழிலும் கிழக்கு பதிப்பகம் சார்பில் வெளிவந்துள்ளது. அந்த நூலின் பெயர் அழகிய மரம் என்பதாகும். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் திமுகவினரும் அந்த புத்தகத்தை படித்து பார்க்க வேண்டும்.

மகாகவி பாரதியார் “கல்வியில் சிறந்த தமிழ் நாடு” என பெருமையாக பாடியுள்ளார். ஆனால் திமுகவினரோ பிரிட்டிஷ் ஆங்கிலேய வெள்ளைக்கார கிறித்துவர்கள் தான் எழுதப்படிக்க சொல்லி தந்தார்கள் எனக் கூறி தமிழனுக்கு இழிவை தேடி தருகின்றனர். கல்வியின் பெயரால் மதத்தை திணித்த சாதனையை தான் கிறித்துவ கல்வி நிலையங்கள் செய்து வந்துள்ளன என பகிரங்கமாக கூற முடியும். சாதியையும், திராவிட ஆரிய இனவாதம் எனவும் மக்களை திட்டமிட்டு பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தது பிரிட்டிஷ் ஆங்கிலேயே கிறித்துவர்கள். ஆங்கிலேயனின் அடிவருடிகளாக ஆட்சி அதிகார சுகத்திற்கு விலை போனது திமுகவின் முந்தைய தலைமுறையான நீதிக்கட்சி என்பது வரலாறு.

விஸ்வகர்மா என்பது படைப்பின் திறமையை குறிப்பது. ஆனால் திமுகவினரோ தொழில் நுட்ப வளர்ச்சிக்கு மத்திய அரசு வழங்கும் விஸ்வகர்மா திட்டத்தை குலக்கல்வி என இகழ்ந்து அப்பட்டமாக புரட்டு பேசுகிறார்கள். தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு திராவிட ஆட்சியாளர்கள் எதிரானவர்கள் என்பதை தமிழர்கள் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் விஸ்வகர்மா எனும் தொழில்நுட்ப சமுதாயத்தின் பங்களிப்பு மகத்தானது. மேலும் தமிழக வளர்ச்சிக்கு தங்கம், செம்பு போன்ற பல்வகையான தொழில்நுட்ப, கைவினை கலைகளுக்கு இந்த சமூகத்தினர் மிகப் பெரிய பங்களித்துள்ளன‌ர். மேலும் விஸ்வகர்மா என்றால் உலகைப் படைப்பவர் என்றும் அர்த்தம். இதையெல்லாம் உணராமல் திமுகவினர் விஸ்வகர்மா பெயரில் ஒரு திட்டம் இருப்பதாலேயே அதை எதிர்ப்பது என்பது அந்த விஸ்வகர்மா திட்டத்தையும், அந்த சமூகத்தினரயையும் இழிவுபடுத்தும் நோக்கம் தான் என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள்.

தமிழகம் ஆன்மிக பூமி. இந்த ஆன்மிக பூமியை தரிசிக்க பல மாநிலத்தவர்களும் வெளிநாட்டவர்களும் வரும்போது நமது தமிழர்களின் கைவினை பொருளுக்கான பெருமை உலகம் முழுவதும் சென்று சேரும். அதற்கு விஸ்வகர்மா திட்டம் தமிழர்கள் கைவினை கலைஞர்கள் வளப்படுத்தும். ஆனால் தாத்தா, மகன், பேரன் என அரசியல் குலத் தொழில் செய்யும் திமுகவும் அதன் தலைவர் குடும்பமும் விஸ்வகர்மா திட்டத்தை குலக்கல்வி என ஏளனம் செய்வதுதான் வேடிக்கையானது. தமிழர்கள் இன்னமும் ஏமாளிகளாக இருப்பார்கள் என்று திமுக தலைவர்கள் கனவு காண வேண்டாம். மொழி, இனம், சாதி, மாநிலம் என பேசிப்பேசி இந்துக்களை பிரிப்பதும், கிறித்தவ முஸ்லிம்களுக்கு அடிபணிந்து அவர்களை உயர்த்தி அரசியல் செய்து பிழைக்கலாம் என்பதும் இனி நடக்காது.

இதே திமுக அரசு மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை கலைஞர் கைவினை திட்டம் என்று கூறுகிறது. அதேபோல தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர் ஆக்குவதற்கான நவீன கழிவுநீர் அகற்றும் வாகனம் வழங்கும் திட்டம் என்று கூறுகிறது. இவையெல்லாம் குலதொழிலாக ஊக்கப்படுவதாகக் கருதினால் எவ்வளவு முட்டாள்தனம்? “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றும் கூறிய உயர்ந்த எண்ணத்தை கொண்ட பெருங்குடிகள் தமிழர்களாகிய இந்துக்கள். பெண்கள் படித்தால் தீட்டு என்று சொல்லியிருந்தால் அவ்வையார், காக்கைப்பாடினியார், நக்கண்ணையார், வெள்ளி வீதியார், நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார், மதுரை ஒலைக்கடையத்தார், காவற்பெண்டு, ஆதிமந்தி முதலான பெண்கள் போற்றப்பட்டிருக்க முடியுமா? எனவே வரலாறு தெரியாமல் திமுகவினர் கிறித்தவ மிஷனரிகளை பாராட்டி தமிழனுக்கு முட்டாள் பட்டம் கட்டுவதை உதயநிதி ஸ்டாலின் அவர்களும், திமுக வினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விஸ்வகர்மா எனும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசை இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.