உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்று தமிழக வீரர் டி குகேஷ் சாதனை!

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி 18 வயதேயான தமிழக வீரர் டி குகேஷ் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலமாக உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்று இளம் வீரர் என்ற சாதனையை டி குகேஷ் செய்துள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 26 முதல் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரனை எதிர்த்து தமிழ்நாட்டின் 18 வயதேயான டி குகேஷ் விளையாடினார். மொத்தமாக 14 சுற்றுகள் நடந்த இந்த இறுதிப்போட்டியில் 13 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா 6.5 புள்ளிகளை பெற்றிருந்தனர். இதனால் கடைசி சுற்றுப் போட்டியில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனிடையே கடைசி சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. இதனால் டை பிரேக்கர் வரை ஆட்டம் செல்லும் என்று பார்க்கப்பட்டது. இதன்பின் இறுதிச்சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் டிங் லிரனும், கறுப்பு நிற காய்களுடன் குகேஷ் விளையாடினர். 51வது வரை நகர்த்தல் வரை ஆட்டம் டிராவை நோக்கியே சென்றது. ஆனால் 53வது நகர்த்தலின் போது டிங் லிரன் செய்த தவறு ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டது. இதன்பின் 58வது நகர்த்தலுக்கு பின் டிங் லிரன் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதன் மூலமாக தமிழ்நாட்டின் டி குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்தார்.

இதற்கு முன்பாக ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் 22 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை 18 ஆண்டுகள், 8 மாதங்கள், 14 நாட்களே ஆன குகேஷ் முறியடித்துள்ளார். பெரிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்டாத டி குகேஷ், இந்த வெற்றிக்கு பின் ஆனந்த கண்ணீர் சிந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து குகேஷ் பேசுகையில், “2017ஆம் ஆண்டு செஸ் விளையாடிக் கொண்டிருந்த போது உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் இளம் வீரராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தற்போது இந்த வெற்றியின் மூலமாக கனவு நனவாகியுள்ளது. அதேபோல் 2013ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை கண்ணாடி அறைக்கு வெளியில் நின்று பார்த்தேன். இன்று இந்த நிலையில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போட்டிக்கு உடல் ரீதியாக மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராகி வந்தேன். கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிடம் இருந்து சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. 2 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இது அமைந்துள்ளது. அதேபோல் டிங் லிரன் செய்த தவறை உணர்ந்த அந்த நொடி, வாழ்வின் சிறந்த தருணம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குகேஷ்-க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், “உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற இளம் வீரர் குகேஷுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். சபாஷ் குகேஷ். ஒவ்வொரு இந்தியர் சார்பாகவும், நீங்கள் எதிர்காலத்தில் புகழ் பெற வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது, `குகேஷின் சாதனைக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி, அவரது இணையற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதியின் விளைவாகும். அவரது வெற்றி சதுரங்க வரலாற்றில் அவரது பெயரை பொறித்திருப்பது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியுள்ளது’ என்று வாழ்த்து கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

சர்வதேச சதுரங்க போட்டிகளில், குகேஷ் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வருகிறார் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். அவரது வெற்றி நமது நாட்டை பெருமைப்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்க்கிறது. இவ்வளவு இளம் வயதில் இதுபோன்ற அசாதாரண திறமைகளைக் காண்பது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024ல் சாம்பியன் பட்டம் வென்ற நம் சொந்த கிராண்ட்மாஸ்டர் டிகுகேஷுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

SDAT இன் ELITE பிளேயர்ஸ் திட்டத்தில் புகழ்பெற்ற வீரரான குகேஷ், சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் நிலையான வெற்றிகளைத் தொடர்ந்து கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது வெற்றி நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டையும் கவனிக்க வைக்கிறது. இவ்வளவு இளம் வயதிலேயே இப்படிப்பட்ட அசாதாரண திறமையைக் கண்டது உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது.

பிரகாசிக்கவும், சாம்பியன்!. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.