ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (டிச.14) காலை காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் இன்று காலை 10.12 மணியளவில் பிரிந்தது என்று சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகில், அவர் வாழ்ந்த மணப்பாக்கம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு மலர்மாலை வைத்து வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் உடன் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கோ.வி.செழியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.