விஜய் உடன் பங்கேற்க கூடாது என திருமாவுக்கு திமுக அழுத்தம் கொடுத்தது: ஆதவ் அர்ஜுனா!

அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன்- விஜய் இணைந்து பங்கேற்பதாக இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதற்கிடையே திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு அரசியலில் கடந்த சில காலங்களாகவே ஆதவ் அர்ஜுனா பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். அவரது கருத்துகள் விவாதங்களைக் கிளப்பி வருகிறது. இந்தச் சூழலில் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் உடன் திருமாவளவன் பங்கேற்காதது தொடர்பாக அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறார். அதாவது திருமாவளவனுக்கு திமுகவே அழுத்தம் கொடுத்ததாக ஆதவ் அர்ஜுனா புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். விஜய் அந்த புத்தக விழாவில் கலந்து கொண்ட நிலையில், இதன் காரணமாகவே விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கக்கூடாது என்று திமுக அழுத்தம் கொடுத்தாக அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், புத்தக வெளியீட்டு விழாவின் மூலம் கூட்டணி உருவாகும் என்று நினைப்பது முதிர்ச்சியற்றது என்றும் அவர் சாடியுள்ளார். இதற்காக அமைச்சர் எ.வ. வேலு தான் திருமாவளவனிடம் பேசியதாகவும் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்பதை முதல்வர் விரும்பவில்லை என்று எ. வ. வேலு அப்போது தெரிவித்ததாகவும் ஆதவ் அர்ஜுனா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். திமுகவின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கே எதிரானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இம்மாத தொடக்கத்தில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதலில் தவெக தலைவர் விஜய் மற்றும் திருமாவளவன் இணைந்து கலந்து கொள்வதாக இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் சில காரணங்களால் திருமாவளவன் இதில் கலந்து கொள்ளவில்லை. அப்போதே திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே திருமாவளவன் அதில் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியானது. இருப்பினும், அதை அப்போதே திருமாவளவன் திட்டவட்டமாக மறுத்து இருந்தார். அதேபோல அந்த நிகழ்ச்சியில் விசிகவின் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அதாவது மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் என்றும் இங்குப் பிறப்பால் ஒரு முதல்வர் உருவாக்கப்படக் கூடாது என்றும் பேசியிருந்தார். மேலும், கருத்தியல் தலைவர்தான் தமிழகத்தில் ஆள வேண்டும் என்றும் அவர் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு எப்படி இதுபோல பேசலாம் என்று விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது. இது தொடர்பாக திருமாவளவனிடம் கேட்ட போது அவரும் ஆதவ் அர்ஜுனா பேச்சில் தனக்கு உடன்பாடு இல்லை என்றே கூறியிருந்தார். மேலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து விசிகவில் இருந்து ஆறு மாத காலத்திற்கு ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். தொடர்ந்து பல முறை அறிவுறுத்தல்கள் வழங்கியும் அதை மீறிச் செயல்பட்டு வந்ததாலேயே ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.