அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து புது வழக்கு!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தலைமையேற்ற பின் தொடர் தோல்வியால் மக்கள் மத்தியில் அதிமுக நம்பிக்கை இழந்து வருகிறது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட அதிமுகவின் கட்சி விதிகள் தொண்டர்களின் ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளன என்றும், அதன் அடிப்படையில், விதிகள் திருத்தப்பட்டதை ஏற்று அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த புதிய வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.