இலங்கையின் அதிபராக பதவியேற்றுள்ள அனுரகுமார திசநாயக 3 நாட்கள் பயணமாக நேற்று டெல்லி வந்திருந்தார். இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துள்ளார்.
இலங்கையில் சமீப காலமாக பொருளாதார நிலையற்ற தன்மை நிலவி வந்தது. இதன் உச்சமாக மக்கள் புரட்சி வெடித்தது. இதைக்கண்டு பயந்த அப்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்சே இலங்கையை விட்டு தப்பி ஓடினார். இதனையடுத்து இடைக்கால அதிபரா கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார். அவரது ஆட்சியில் பெரிய அளவுக்கு பிரச்னைகள் இல்லை என்றாலும் கூட, ஏற்கெனவே இருந்த பிரச்னைகள் எதுவும் குறையவில்லை. இப்படி இருக்கையில்தான் புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது. தேர்தலில் இடதுசாரி கூட்டணி கட்சியின் வேட்பாளரான அனுரகுமார திசநாயக வெற்றி பெற்றார். இலங்கை வரலாற்றில் இடதுசாரி வேட்பாளர் ஒருவர் வெற்றிப்பெறுவது இதுவே முதல்முறையாகும். எனவே அவர் மேற்கொள்ள உள்ள மாற்றங்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன.
இந்நிலையில் அதிபராக பதவியேற்ற பின்னர் முதல் பயணமாக அவர் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். 3 நாட்கள் பயணமாக நேற்று டெல்லி வந்த அவருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பான வரவேற்பு கொடுத்தார். இதனையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த திசநாயக, பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். இதனை தொடர்ந்து இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை திசநாயக சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவுகள், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து விரிவாக பேசப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் முதலீடுகளை ஈர்க்க இலங்கை ஆர்வமாக இருக்கிறது.
மறுபுறம் இந்த சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு உரிய தீர்வு எட்டப்படுமா? என்றும் கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 3228 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை சுமார் 65 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது ஒருபுறம் என்றாலும் கூட மறுபுறம் படகுகள் பறிமுல் அதை அழிப்பது உள்ளிட்ட விஷயங்களும் பொருளாதார அளவில் பெரிய பாதிப்பை தமிழக மீனவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.