எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச கே.என்.நேருவுக்கு அருகதை இல்லை. அதிமுகவின் எழுச்சியால் அமைச்சர் கே.என்.நேருவுக்கு பயம் வந்துவிட்டது என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அச்சம் என்ற சொல்லே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அகராதியில் கிடையாது. “மக்களுக்காக உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவோம்” என்று எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கர்ஜித்தபோது எதிர் பக்கத்தில் இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மொத்த திமுக கூட்டமும் பயந்து நடுங்கியதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்த பிறகும். எங்களைப் பார்த்து பயம் என்ற சொல்லை திமுக பயன்படுத்துவது வேடிக்கையின் உச்சம்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், பல நூறு கோடி ரூபாய் கடன்களுக்குச் சொந்தக்காரர்களான உங்களுடைய குடும்பத்திற்கு, தற்போது அத்தனை கடனையும் அடைப்பதற்கு எங்கிருந்து பணம் வந்தது? மீண்டும் செல்வச் சீமானாக வலம் வருவது எப்படி என்பதை “பயம்” இல்லாமல் சொல்வாரா பம்(மிய)மல் நேரு?. நிதி அமைச்சராக இருந்து, இப்போதும் அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன் ஒரு ஆடியோவில், குறுகிய காலத்தில் சுமார் 30,000 கோடி ரூபாயை ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சுருட்டியதாகச் சொன்னாரே யார் அவர்கள் என்று “பயம்” இல்லாமல் சொல்வாரா அமைச்சர் கே.என்.நேரு?.
இந்த 30,000 கோடி ரூபாய் உட்பட உங்களுடைய அனைத்து ஊழல்களும் அம்பலப்படும் என்பதால், ரெய்டுக்கும், வருமானவரித் துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் “பயந்து” இந்தியா கூட்டணியில் இருந்தும்கூட, பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவரான மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கை அழைத்து கருணாநிதி நாணயத்தை வெளியிட்டு, ‘சூரியன்-தாமரை’ கூட்டணியை தமிழ் நாட்டு மக்களுக்கு திரையிட்டுக் காட்டியவர்களே நீங்கள் தானே.
டங்ஸ்டன் சுரங்கம் பற்றி பிதற்றியுள்ளார் அமைச்சர் நேரு. டங்ஸ்டன், கிராபைட் உள்ளிட்ட 10 வகை கனிமங்களை அரியவகை கனிமங்களாக அறிவித்தும், அவற்றை ஏலமிடும் உரிமை மத்திய அரசிற்கு மட்டுமே உள்ளது போன்ற பல திருத்தங்கள் அடங்கிய கனிம வள திருத்தச் சட்டம் 2023 நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தபோது, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்பதை அச்சமின்றி சொல்வாரா பம்மல் நேரு? மேலும், 2023, அக்டோபர் மாதம் திமுக அரசு மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் ‘டங்ஸ்டன் உள்ளிட்ட அரிய வகை கனிமங்களை ஏலம் விடும் உரிமையை மாநில அரசுக்கே வழங்க வேண்டும்’ என்று கோரியதே தவிர, கனிமவள திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரியோ, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக் கோரியோ ஏன் கடிதம் எழுதவில்லை ? என்பதை பயமில்லாமல் விளக்குவாரா அமைச்சர் கே.என்.நேரு.
நீட் என்றால் பயம்..! மேகதாது என்றால் பயம்..! மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கலைஞர் டி.வியில் ரெய்டு பயம்..! குடையின் நிறத்தையே மாற்றி வெள்ளைக் குடை காட்டும் அளவுக்கு பயம்…! பிரஸ் மீட் என்றால் பயம்..! சட்டப் பேரவை என்றால் பயம்..! நேரலை என்றால் இன்னும் பயம்…! தற்போது டங்ஸ்டன் என்றால் பயம்…! சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேச எழுந்தாலே பயமோ பயம்…! காற்றடித்தால் பயம் துண்டுச் சீட்டு பறந்துவிடுமே என்பதால்..! அதனால்தான், 2 நாட்களில் சட்டமன்றத்தையே நடத்தும் ஸ்டாலின், எங்கள் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடைய அறிக்கைகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், தனது அடிமை மந்திரிகள் மூலம் பதில் அளிக்கிறார் என்பதை அமைச்சர் கே.என்.நேரு பயமில்லாமல் மக்களுக்கு தெளிவுபடுத்துவாரா?
அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமியை சந்திக்கத் திராணியற்ற, துணிவற்ற, அறிவாலய அறிவிலிகள், தனி மனிதத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது, எதிர்காலம் தரப்போகும் தோல்வியை உணர்ந்ததால் என்பதை சிறு பிள்ளைகூட உணரும். திருச்சியின் தி.மு.க. தாதா தான்தான் என்று கூறும் இந்த நபரை, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மந்திரியான அன்பில் மகேஷ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மதிக்காத நிலைதான் உள்ளது. தங்களை சம்பாதிக்கவிடாமல், தொழில் செய்யவிடாமல் செயல்படுவதாக, சொந்தக் கட்சியினரே புலம்புகிறார்கள்.
தன் மகன் அருண் நேருவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மற்றும் மாப்பிளைக்கும், வாரிசுக்கும் இவர் கால் கழுவியதை சொல்லிச் சொல்லி திருச்சி உடன்பிறப்புகள் காரி துப்புகிறார்கள். தன்மான சிங்கமாக பீடு நடைபோடும் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசுவதற்கு, இவருக்கு எந்த அருகதையும் இல்லை.
“பயம்” மட்டுமே உருவான உண்மையான கோழை, மு.க.ஸ்டாலினின் சீனியர் கொத்தடிமையாக இருந்து, மாநகராட்சி கவுன்சிலர்களின் அடிதடிகளை கட்டப் பஞ்சாயத்து செய்வதையே முழுநேர வேலையாகக் கொண்டிருக்கும் நேருவுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி பேசுவதற்கு எள்ளளவும் அருகதை இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.