கவர்னரை எதிர்க்குறீங்க, சங்கி கவர்னர்னு சொல்றீங்க. அந்த சங்கி கவர்னர், தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை தமிழக நியமனங்களில் நியமிக்கிறார் என்றால், எப்படி? மத்திய அரசின் அழுத்தத்திற்கு தமிழக அரசு அடி பணிகிறது. அதிகாரிகள், அமைச்சர்களை ஏமாற்றுகின்றனர் என்று தவாக தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் டி.வேல்முருகன், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
கடந்த அதிமுக ஆட்சியில் சமூகம் சார்ந்த பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு, என்னுடைய தலைமையில் தமிழர் வாழ்வுரிமை என்கிற கூட்டமைப்பை உருவாக்கி, மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்தோம். அதே அமைப்பினரோடு சேர்ந்து ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக முதல்வரை சந்திக்க முயற்சித்தோம். ஜாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசு சார்ந்த விசயம் அல்ல. மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் மத்திய அரசு சார்ந்தது. ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க, மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது.
அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அது குறித்து பேச முதல்வரிடம் நேரம் கேட்டால், இதுவரை கிடைக்கவில்லை. எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை, அது சார்ந்த அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் சந்திக்க நேரம் கேட்கிறார்கள் என்று முதல்வரின் உதவியாளரிடம் கேட்டேன். பட்டியல் கொடுங்கள் என்றார், இதுவரை அழைக்கவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டி போராட்டம் நடத்தி, ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்ததே எங்கள் அமைப்பு தான். அந்த கூட்டமைப்பு கூடி, முதல்வரை சந்திக்க நேரம் கேட்கிறோம், கிடைக்கவில்லை. வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக, தொகுதிக்கு போகும் போதெல்லாம் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். பாரதிதாசன் தலைமையில் குழு போட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த குழு இதுவரை எங்கு போய் ஆய்வு செய்தது? கண்துடைப்பா அந்த குழு?
தமிழக அரசு அதிகாரத்தில் தமிழ் குடிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதை எதிர்த்து கேட்டால், உங்களை சந்திக்கமாட்டோம், உங்களிடம் பேச மாட்டோம், உங்கள் தொகுதியில் ஆய்வு நடந்தால் சொல்ல மாட்டோம், உன்னால் முடிந்ததை பார் என்கிற அதிகார போதையில் நடக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான், வேறு வழியில்லாமல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நேரடியாக பேச முடிவு செய்தேன்.
அதிகாரிகள் நியமனத்தில் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை. எல்லா இடங்களிலும் வடநாட்டு அதிகாரிகள் தான் நியமிக்கப்படுகின்றனர். பட்டியல் எடுத்து வரச் சொல்லுங்க, ஆளுங்கட்சியோடு விவாதிக்கலாம். இந்த 4 ஆண்டுகளில் இது தான் நடந்துள்ளது. சட்டமன்றத்தில் பேச வாய்ப்பில்லை, கவனஈர்ப்பை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். பாஜக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிவிடக்கூடாது என்பதற்காக தான் அனைத்தையும் சகித்துக் கொண்டு இந்த 4 ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கிறோம். நியாயமாக செய்ய வேண்டியதை செய்யவில்லை. மழை வரும் போதெல்லாம் போராட்டத் தியாகிகளின் வீடுகள் அடித்துச் செல்கிறது. அவர்களுக்கு வீடு கேட்டேன், அதுக்கு காசு இல்ல; கார் ரேஸூக்கு கோடி கணக்கில் செலவு செய்கிறார்கள்.
இங்கு யார் ஆட்சி நடத்துவது? அதிகாரிகள் தான் ஆட்சி நடத்துகிறார்கள். அதிலும் வடமாநில ஆர்.எஸ்.எஸ்., பின்னணி கொண்ட அதிகாரிகள் தான் ஆட்சி நடத்துகிறார்கள். முதலமைச்சரும், அமைச்சர்களும் தான் ஆள வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி செய்யாமல், அதிகாரிகள் ஆட்சி செய்து கொண்டு.. என்ன நிர்வாகம் இது? உயிர் அனைவருக்கும் ஒன்று தானே? பட்டாசு ஆலையில் இறந்தால் 1 லட்சம், சாராயம் குடித்து செத்தால் 10 லட்சம். இது என்ன நிவாரண கணக்கு? முதல்வரை யார் தவறாக வழிநடத்துவது?
இந்த பேட்டி முடிந்ததுமே, ‘திமுக கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சனம் செய்கிறார், குடைச்சல் கொடுக்கிறார்’ என்று முகநூலில் உடன்பிறப்புகள் பொங்குவார்கள். நான் பேசுவது, உங்களுக்கும் சேர்த்து தான். உங்கள் அரசுக்கும், ஆட்சிக்கும் நல்ல பெயர் வேண்டும் என்பதற்காக தான் பேசுகிறேன். டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக 100 கிராம மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த பிறகு, முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்புகிறார். நான் முதலமைச்சராக இருக்கும் வரை இந்த திட்டம் வராது என்று சட்டமன்றத்தில் பதிலளித்தார், பாராட்டுகிறேன். அதே பக்கத்து மாவட்டத்தில், கன்னியாகுமரியில் இதே மாதிரியான மலையை சுரங்கமாக அமைக்க மக்களிடம் கருத்து கேட்க, மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஏன் அதுவரை இதை தமிழக அரசு எதிர்க்கவில்லை? துறை செயலாளர்கள் என்ன செய்கிறார்கள்? துறை அமைச்சர்கள் ஏன் எதிர்க்கவில்லை?
இங்குள்ள அதிகாரிகள் நூல் விட்டு பார்க்கிறார்கள். மக்கள் எதிர்க்கிறார்களா இல்லை என்று அமைதியாக பார்க்கிறார்கள், எதிர்ப்பு இல்லை என்றால் சுடுகாடா மாற்றுவது. எதிர்ப்பு இல்லை என்றால், முதலமைச்சர், அமைச்சரிடம் கூறி, அதன் பின் நாங்களும் எதிர்க்கிறோம், கைவிடுறோம் என்கிறார்கள். டங்ஸ்டன் விவகாரத்தில் 100 கிராம மக்கள் போராட்டத்திற்கு வந்த பிறகு தான் எதிர்க்க வேண்டுமா? சட்டமன்றத்தில் எடப்பாடி கேட்ட கேள்வி 100க்கு 100 சரியான கேள்வி, என்னுடைய பார்வையில்.
10 மாதம் காலம் கனிமவளத்துறை, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? அப்போ, எதிர்ப்பு கிளம்புதா இல்லை என்று பார்ப்போம் என்று காத்திருந்திருக்கிறார்கள். எதிர்ப்பு கிளம்பவில்லை என்றால், மத்திய அரசுக்கு சிவப்பு கம்பளம் விரிப்போம், இல்லையென்றால் முதலமைச்சரிடம் சொல்லி தடுப்போம் என்று தான் இந்த அரசு இயந்திரம் இயங்குகிறது. இதை தான் நான் எதிர்க்கிறேன். மத்திய அரசுடன் இணக்கமாக இல்லை என்று கூறும் இவர்கள், ஏன் மத்திய அரசுடன் சேர்ந்து பரந்தூர் விமான நிலையம் அமைக்க முயற்சிக்கிறார்கள்? அந்த 25 கிராமமும் வன்னியர் சமுதாய மக்கள், அதனால் அவர்களின் கோரிக்கையை புறக்கணிக்கிறார்களா? சென்னையில் 6 ஆயிரம் நிவாரணம் தருகிறீர்கள், வடமாவட்ட வெள்ள பாதிப்பகளுக்கு 2 ஆயிரம் தான் தருவீர்களா? வன்னியர் ஓட்டுகளை வாங்கி தான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம் என்கிற எண்ணம், ஆளும் வர்க்கத்திற்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.
தமிழக ஆளுநர் ஒரு பக்கமும், டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு பக்கமும் இங்கு அதிகாரம் செலுத்துகிறார்கள். ஓப்பனா சொல்றேன், டிஎன்பிஎஸ்சி.க்கு ஓய்வு பெற்றவர்களை நியமிக்க அழுத்தம் கொடுத்தது யார்? அது யாருடைய பரிந்துரை? எனக்கு தெரியும், கால் நூற்றாண்டு காலம் அரசு தொடர்பான அனுபவம் பெற்றவன் நான். அரசு நோக்கங்களை புரிந்தவன் நான். தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் நியமிக்க தமிழகத்தில் தகுதியான ஆட்கள் இல்லையா? கவர்னரை எதிர்க்குறீங்க, சங்கி கவர்னர்னு சொல்றீங்க. அந்த சங்கி கவர்னர், தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை தமிழக நியமனங்களில் நியமிக்கிறார் என்றால், எப்படி? மத்திய அரசின் அழுத்தத்திற்கு தமிழக அரசு அடி பணிகிறது. அதிகாரிகள், அமைச்சர்களை ஏமாற்றுகின்றனர். இந்த அதிகாரிகள் யாரும் ஓட்டு கேட்க வரப்போவதில்லை.
கூட்டணி கட்சியினரிடம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பேச வேண்டும். அதை கலைஞர் செய்தார். அந்த சிஸ்டம் முதல்வர் ஸ்டாலினிடம் இல்லை. செய்ய மறுக்கிறார். இந்த கவலை அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் இருக்கிறது. அவர்கள் பேசவில்லை. நான் வெளிப்படைத் தன்மையாக பேசுபவன், பேசுகிறேன். சட்டமன்றத்தில் பேசுகிறேன், மனு கொடுக்கிறேன், நடக்கவில்லை. அதனால், பொதுவெளியில் பேசுகிறேன். 7 மானியக் கோரிக்கையை 7 நிமிடத்தில் பேசச் சொல்கிறார்கள். எப்படி சாத்தியம்? நான் திமுக சின்னத்தில் போட்டியிட்டிருக்கலாம், ஆனால், நான் ஒரு கட்சியை தனியாக நடத்துகிறேன். இந்த அரசுக்கு நற்பெயர் கொடுப்பதற்காக தான் நான் இவற்றை கூறுகிறேன். குறைகளை அப்படி தான் கலைஞர் எடுத்துக் கொண்டார். நான் பாமக.வில் இருந்த போது, கட்சி அறிக்கை வரும்போது எல்லாம், ‘தைலாபுரத்தில் இருந்து தைலம் வருகிறது’ என்று தானே கலைஞர் சொன்னார். அவரிடம் பெருந்தன்மை இருந்தது.
இன்று அமைச்சர்களின் உதவியாளர்களே நமது அழைப்பை ஏற்க மறுக்கின்றனர். தேர்தலை பொருத்தவரை நான் தெளிவாக உள்ளேன். தேர்தல் என்பது, திமுக, அதிமுக உடன் கூட்டணி வைக்க கூடாது என்று தான் 2016ல் தனியாக கட்சி தொடங்கி, போட்டியிட்டேன். நான் போட்டியிடும் போது, எனக்கு 32 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. இன்னும் 20 ஆயிரம் வாக்குகள் எனக்கு வேண்டும். அந்த வாக்குகள், அந்த பகுதியில் பாமகவிடம் உள்ளது. அவர்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள். அடுத்து இரு பெரும் கட்சிகளான திமுக, அதிமுகவிடம் தான் உள்ளது. அந்த அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினராக சென்று, மக்கள் பிரச்னையை பேச வேண்டும் என்பதற்காக, தேர்தலுக்காக திமுக, அதிமுக உடன் சிறு உடன்பாடு செய்து கொண்டோம். என் உறவினர்கள் எல்லாம், அந்த இரு கட்சிகளுக்குள்ளும் இருக்கிறார்கள். தமிழ் தேசிய தளத்தில் இருந்து, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புளை இணைத்து, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக வேண்டாம், நாம் ஒன்றிணைவோம் என்று கடந்த தேர்தலில் முயற்சி எடுத்தேன். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. சீமான் என்னுடன் வரவில்லை. அய்யா மணியரசன் தான் அதற்கு சாட்சி. வேண்டுமானால், அவரிடம் கேளுங்கள். உண்மையா இல்லையா என்று நீங்களே கேளுங்கள். இதே சீமான் தான் என்னை அழைத்து கூறினார், ‘தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,ஆக இருந்து பல சாதனை படைத்திருக்கிறீர்கள், நான் சொல்கிறேன், திமுக உடன் கூட்டணி வைத்து, நீங்கள் சட்டமன்றத்திற்குள் போங்க’ என்று என்னை வாழ்த்தி அனுப்பியது சீமான் தான். நான் என்ன செய்ய முடியும்?
நான் ஒரு நேர்மையான அரசியல்வாதி. நேர்மையான மக்களுக்கான சட்டமன்ற உறுப்பினர். வேறுவழியில்லாமல் திமுக உடன் கூட்டணி உடன்படிக்கை வைத்துக் கொண்டோம். அவ்வளவு தான். தேர்தலுக்கு உடன்படிக்கை வைத்துக் கொண்டோம், தேர்தல் முடிந்துவிட்டது. இன்று சட்டமன்ற உறுப்பினராக அந்த தொகுதி சார்பாக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். ஆனால், 234 தொகுதிகளுக்கான பிரச்னையை நான் பேசலாம். அந்த உரிமையை சட்டமன்ற விதிகள் எனக்கு வழங்கியிருக்கிறது. என் தொகுதிக்குள் தான் நான் பேச வேண்டும், கேள்வி எழுப்ப வேண்டும் என்று பேரவை தலைவர் பேசுகிறார். துணை கேள்வி கேட்டால், ‘கன்னியாகுமரி விவகாரத்துக்கு பண்ருட்டியில் இருந்த எதுக்கு கேள்வி கேட்குறீங்க’ என்று பெல் அடித்து உட்கார வைக்கிறீங்க, இதுவா மாண்பு? இதை முதல்வர் ஒழுங்குபடுத்தனும், சபை முன்னவர் ஒழுங்குபடுத்தனும். இவ்வாறு வேல்முருகன் பேசியுள்ளார்.