துணைவேந்தரை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு அமைத்த தேடுதல் குழு விதிகளுக்குப் புறம்பானது. நான் அமைத்துள்ள குழுவை அரசிதழில் வெளியிட வேண்டும். தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவில் யுஜிசி தலைவர் பரிந்துரைத்த நபர் இல்லாதது விதிமீறல் என ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தற்போது துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். இந்தக் குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரைக்கும். அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம். இந்தச் சூழலில், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் ரவி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், துணைவேந்தர் நியமனத்தில், யுஜிசியின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம். தேடுதல் குழுவில் யுஜிசியின் பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்துக்காகத் தேடுதல் குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவில், ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்ட நபர், தமிழ்நாடு அரசு பிரதிநிதி, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் மற்றும் யுஜிசி தலைவர் பிரதிநிதி ஆகியோர் இருந்தனர். குழுவின் தலைவராக ஆளுநரின் பிரதிநிதி இருப்பார். இதுகுறித்த அறிவிக்கையை ஆளுநர், அக்டோபர் 25ஆம் தேதி வெளியிட்டார். எனினும் யுஜிசி உறுப்பினரை ஏற்காத தமிழக அரசு, அவர் இல்லாமல், புதிய தேடுதல் குழுவை அமைத்தது. இதுகுறித்த அரசாணையை தமிழக அரசின் உயர் கல்வித்துறை டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட்டது. எனினும் இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசு அமைத்த தேடுதல் குழுவைத் திரும்பப் பெற்று, பல்கலைக்கழக மானியத் தலைவர் பரிந்துரைத்த நபரைக் குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.