பல நூறுமுறை அம்பேத்கர் பெயரை உயர்த்தி சொல்வோம்: உதயநிதி ஸ்டாலின்

அண்ணல் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் விமர்சித்துள்ளதற்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அரசியல் அமைப்புச் சட்டம் மீது விவாதம் நடைபெற்றது. ராஜ்யசபாவில் இந்த விவாதங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ராஜ்யசபாவில் பதிலளித்தார். அப்போது, இந்திய அரசியலமைப்பு மிகவும் விரிவாக எழுதப்பட்டது என்றும், இது பரவலான விவாதங்களின் பாரம்பரிய இந்திய நடைமுறையின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 22 மதங்கள், சாதிகள் மற்றும் சமூகங்கள் மற்றும் ஒவ்வொரு சுதேச மாநிலம் மற்றும் ராஜ்யத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 299 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபையின் மாறுபட்ட அமைப்பை அவர் எடுத்துரைத்தார், இது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தது, என்றார். அரசியலமைப்பின் 75 ஆண்டுகால பயணம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அரசுகளால் அது எவ்வாறு நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். ஒரு அரசியலமைப்புச் சட்டத்தின் செயல்திறன், அதை அமல்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களைப் பொறுத்தே அமையும் என்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் ஆழ்ந்த கருத்தை

அவர் நினைவு கூர்ந்தார். தேர்தல்களில் அரசியலமைப்பை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகளை விமர்சித்து, பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கும் நேர்மையற்ற முறையில் வாக்குகளைப் பெறுவதற்கும் அக்கட்சிகள் அரசியலமைப்பின் நகல்களைக் கையில் எடுப்பதாகக் கூறினார். இந்திய அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் நிகழாத செயல் என்று இதை கண்டித்த அவர், அரசியலமைப்பு என்பது அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தப்படுவதற்கான ஒரு சின்னம் அல்ல, ஆனால் மரியாதையைக் கோரும் ஒரு புனிதமான நம்பிக்கை என்று வலியுறுத்தினார். அத்துடன், எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர் என கோஷம் போடுவது பேஷனாகிவிட்டது.. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைக்கும் எனவும் அமித்ஷா கிண்டலாக பேசினார். அமித்ஷாவின் அம்பேத்கர் குறித்த இந்த விமர்சனம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமித்ஷா தமது இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க கோரி நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும் இந்தியா கூட்டணி கட்சிகள் முடக்கின. நாடாளுமன்ற வளாகத்திலும் போராட்டங்கள் நடைபெற்றன.

அமித்ஷாவின் கருத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும் என கண்டனம் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அமித்ஷாவின் விமர்சனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில், “எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும். அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்! வாழ்க அம்பேத்கர்! அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்! என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.