அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை!

நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசிய அமித்ஷா பதவி விலக வேண்டும், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று (டிச.19) மாலை 3 மணிக்கு அண்ணாசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘காங்கிரஸ் கட்சி அம்பேத்கர் பெயரை அடிக்கடி கூறுவதற்கு பதிலாக கடவுளின் பெயரை கூறியிருந்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்’ என்று பேசியிருப்பதன் மூலம், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை அவமதித்து இழிவுபடுத்தியிருக்கிறார். இதற்காக அமித்ஷா பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்து போராடி வருகிறது. அம்பேத்கர் புகழை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகிறது என்று உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டையும் கூறியிருக்கிறார்.

நாடு விடுதலை அடைந்த காலகட்டத்தில் அம்பேத்கர் காங்கிரஸ் கட்சி மீது விமர்சனங்களை வைத்திருந்தாலும், அவரது சட்ட நுண்ணறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மனதார விரும்பியது. அதன் அடிப்படையில் கிழக்கு வங்காள தொகுதியில் இன்றைய வங்க தேசத்தில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, அத்தொகுதி பாகிஸ்தானுக்கு சென்று விட்டதால் அவரை மீண்டும் உறுப்பினராக கொண்டு வருவதற்காக மும்பை மாகாணத்தில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்த சட்ட வல்லுநர் எம்.ஆர். ஜெயகரை பதவி விலகச் செய்து, அத்தொகுதியில் இருந்து அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்வதற்கு காங்கிரஸ் கட்சி தீவிர ஆதரவை வழங்கியது. அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்த பிறகு, அரசமைப்புச் சட்டத்தை தயாரிக்கும் வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கரை நியமிப்பதே மிகவும் பொருத்தமானதாகும் என்று கருதிய காந்தியடிகளின் விருப்பத்தின் பேரில், நேரு எடுத்த முயற்சியால் அப்பொறுப்பினை அவர் ஏற்றார். தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை அனைவரும் பாராட்டுகிற வகையில் மிகச் சிறப்பாக செய்து முடித்தவர் அம்பேத்கர்.

அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபையின் கடைசிக் கூட்டம் நடைபெற்ற 1949-ம் ஆண்டு நவ. 25ம் தேதியன்று ஆற்றிய நிறைவுரையில், காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தால் பல்வேறு திருத்தங்களை கொண்டுவந்து அரசமைப்புச் சட்டத்தை இவ்வளவு விரைவாக நிறைவேற்றியிருக்க முடியாது என்று குறிப்பிட்டது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இன்றைக்கும் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அம்பேத்கரின் இக்கூற்றை அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட அமித் ஷாவால் மறுக்க முடியுமா?

இன்றைக்கு 140 கோடி மக்களுக்கும் இருக்கிற ஒரே பாதுகாப்பு அம்பேத்கர் வழங்கிய அரசமைப்புச் சட்டம் தான். அதை சிதைத்து, சின்னாபின்னமாக்குவதற்கு வகுப்புவாத சக்திகளான ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட தீய சக்திகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தவுடனேயே இந்துத்வா சக்திகளின் பிதாமகராக விளங்கிய சாவர்க்கர் கருத்து கூறும் போது, ‘மனுஸ்மிருதியை அரசமைப்புச் சட்டமாக ஏற்று இந்து ராஜ்யம் அமைக்க வேண்டும் என்று கூறியதை எவரும் மறுக்க முடியாது. ஆர்எஸ்எஸ் தலைவர் எம்.எஸ். கோல்வால்க்கரும் அரசமைப்புச் சட்டம், தேசிய கொடி, அதில் உள்ள அசோக சக்கரம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

1949 டிசம்பர் 11-ம் தேதி அம்பேத்கர் கொண்டுவந்த இந்து தொகுப்பு சீர்திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்எஸ்எஸ் நாடு முழுவதும் 79 கண்டனக் கூட்டங்களை நடத்தி, தலைநகர் டெல்லியில் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக மிகப்பெரிய கண்டனப் பேரணி நடத்தி, அம்பேத்கர், பிரதமர் நேரு ஆகியோரது உருவ பொம்மைகளை கொளுத்தியதை எவரும் மறந்திட இயலாது. இதை ராமச்சந்திர குகா தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

1952-ல் நடைபெற்ற முதல் மக்களவை தேர்தலில் மும்பை வடக்கு தனித் தொகுதியில் போட்டியிட்ட அம்பேத்கரை தோற்கடிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த எஸ்.ஏ. டாங்கேவும், வகுப்புவாத கருத்துகளை பரப்பி வந்த சாவர்க்கரும் தான் என்பதை, அம்பேத்கரே குறிப்பிட்டு கூறியதை அசோக் கோபால் என்பவர் அம்பேத்கர் குறித்து எழுதிய நூலின் 794-வது பக்கத்தில் ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், அம்பேத்கரை தோற்கடித்தது காங்கிரஸ் கட்சி என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற செயலாகும். அதையொட்டி, அம்பேத்கர் காங்கிரஸ் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார் என்பதை அமித்ஷாவுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

அம்பேத்கர் புகழை காங்கிரஸ் இருட்டடிப்பு செய்தது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அம்பேத்கருக்கு 75 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிற நேரத்தில் அவரை நாடே புகழ்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் அவர் வழங்கிய அரசமைப்புச் சட்டம் தான். அந்த அரசமைப்புச் சட்டத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு, அரசியல் சமூக பொருளாதார நீதி வழங்கப்பட்டதால் தான் இன்றைக்கும் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக செயல்படுகிற மத்திய பாஜக அரசின் அடக்குமுறையை சிறுபான்மை, பட்டியலின மக்கள் எதிர்கொண்டு போராடி வருகிறார்கள்.

கடந்த 2020 செப்டம்பர் 14ம் தேதியன்று உத்தர பிரதேச மாநிலத்தில் ஹாத்ரஸில் 19 வயது தலித் பெண் வயல்வெளியில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தபோது, அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் நடு இரவில் பலவந்தமாக காவல்துறையினரே மயானத்தில் வைத்து எரித்த கொடுமை குறித்து, பிரதமர் மோடியோ உத்தர பிரதேச முதல்வநர் யோகி ஆதித்யநாத்தோ இதுவரை ஒரு இரங்கல் செய்தி கூட தெரிவிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படாத நிலையில், சமீபத்தில் தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய தலைவர் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அம்பேத்கர் பெயரை உச்சரிக்க உரிமை இருக்கிறதே தவிர, கொடுமை செய்த குற்றவாளிகளை பாதுகாக்கிற பாஜகவினருக்கு என்ன உரிமை இருக்கிறது? நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசிய அமித்ஷா பதவி விலக வேண்டும், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறைகூவல் விடுத்திருக்கிறது.

அதன்படி, சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு கே.வீ. தங்கபாலு தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் முன்னிலையில், இன்று (டிச.19) வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு அண்ணாசாலை தர்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதேபோல அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தியாவுக்கு அரசமைப்புச் சட்டத்தை வழங்கி 140 கோடி மக்களும் ஜனநாயக உரிமையோடு வாழ்வதற்கு அடித்தளம் அமைத்த அம்பேத்கரை இழிவு படுத்துகிற பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்களின் முயற்சிகளை முறியடிக்க காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.