மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்புத் தொட்டி சரிந்து விழுந்த விபத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். 5 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் 840 மெகாவாட், 2-வது பிரிவில் 600 மெகாவாட் என 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் அனல் மின் நிலையம் முதல் பிரிவில் 2வது அலகில் வருடாந்திர பராமரிப்பு பணி நடந்து வரும் நிலையில், 1வது, 3வது மற்றும் 4வது அலகில் மட்டும் மின் உற்பத்தி நடந்து வருகிறது.
இந்நிலையில் முதல் பிரிவில் 3வது அலகில் நிலக்கரி கையாளும் பிரிவில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இன்று மாலை நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தது. அப்போது, அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மீது சுமார் 20 டன் நிலக்கரி விழுந்தது. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் நிலக்கரி குவியலில் சிக்கினர். இது குறித்து தகவல் அறிந்த அனல் மின் நிலைய அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்ரீகாந்த் (24), மனோஜ் குமார்(27), சீனிவாசன் (44), முருகன் (28) கௌதம் (20) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அனல் மின் நிலைய ஆம்புலன்ஸ் வாகனங்கள் காயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு தொழிலாளர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் மனோஜ் குமார் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலக்கரி குவியலில் ஒப்பந்த தொழிலாளர்கள் மாட்டிக்கொண்டதாக சக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ஜேசிபி வாகனங்களைக் கொண்டு நிலக்கரி குவியலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடர்பாடுகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் வெங்கடேசன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த நிலக்கரி குவியலில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேறு ஏதேனும் சிக்கிக் கொண்டுள்ளனாரா? என போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் தீயணைப்பு வீரர்கள், போலீஸார் மற்றும் அனல் மின் நிலைய ஊழியர்கள் 60க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி வட்டாட்சியர் ரமேஷ் மேட்டூர் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் ஆகியோர் அனல் மின் நிலைய வளாகத்தில் சம்பவம் நடந்த பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மேட்டூர் அனல் மின் நிலையம் நுழைவுப் பகுதியில் குவிந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.