தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்: ராமதாஸ்!

வெள்ள நிவாரண நிதி வேண்டி அனைத்துக் கட்சிக் குழுவினர், முதல்வர் தலைமையில் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

இது தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் மழையால் வரலாறு காணாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 நாட்கள் கடந்தும் இதுவரை மத்தியக் குழு, அதன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யவில்லை. இதற்கிடையே, மாநில பேரிடர் நிதியிலிருந்துதான் ரூ.945 கோடியை வழங்கியது. இது மத்திய அரசின் நிதி இல்லை. பெஞ்சல் புயல் பாதிப்புகளை களைவதற்காக தமிழ்நாடு அரசு எவ்வளவு நிதி கேட்டாலும், அதை உடனடியாக ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். தொடர் மழையால் தமிழகத்தில் 15 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது. சேத மதிப்பு குறித்த விரிவான அறிக்கையை தயாரித்து, அந்த அறிக்கையுடன் முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து, தமிழகத்துக்கு உரிய நிதியை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்த வேண்டும். பயிர்கள் பாதிப்புக்கு அரசு அறிவித்த நிவாரண உதவி போதுமானதல்ல. ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும்.

நடப்பாண்டிலும் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ் கட்டாயப் பாடம் இல்லை. தமிழ் கட்டாய பாடச் சட்டம் இயற்றப்பட்டு 19 ஆண்டுகள் ஆகியும், தமிழை கட்டாயப் பாடமாக்க முடியவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி, தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்.

ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அடுத்த 2 ஆண்டுகளில் கவிழ்ந்து விட்டால், 6 மாதங்களில் மீண்டும் பேரவைக்கு தேர்தல் நடத்தப்படும். ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் வந்த பின்னர், புதிய அரசின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகளாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதை பாமகவால் ஏற்க முடியாது.

அனைத்துக் கட்சிகளும் அம்பேத்கரை போற்றியாக வேண்டும். அவரை கொச்சைப்படுத்துவதையோ, அவமதிப்பதையோ ஏற்க முடியாது. அம்பேத்கரை விமர்சிப்பது யாராக இருந்தாலும், அதை ஏற்க முடியாது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.