வடசென்னையில் அமைந்துள்ள அனல்மின் நிலையங்களை விரிவாக்க தமிழக அரசு முயன்று வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “அனல் மின் நிலையத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், வீட்டை அதன் அருகில் கட்டிக்கொள்ளுங்கள்” என்று காட்டமாக தனது எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.
சென்னையின் அடையாளமாக, இன்னமும் பழமை மாறாமல் இருப்பது வடசென்னைதான். இங்கு நெருக்கமாக மிக குறுகிய இடங்களில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இந்த பகுதியில் உள்ள நிறுவனங்கள் மக்களின் வாழ்விடத்தை, வாழ தகுதியற்ற இடமாக மாற்றியுள்ளதாக புகார்கள் எழுந்திருக்கிறது. குறிப்பாக வெறும் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இரண்டு பெரிய அனல் மின் நிலையங்கள், மூன்று துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலை, பாலிமர் மற்றும் ரசாயன ஆலைகள், வாகனத் தொழிற்சாலை, நிலக்கரி சேமிப்பிடங்கள் என சூழலைப் பாதிக்கும் 40-க்கும் மேற்பட்ட அபாயகரமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளதாக பூவுலகின் நண்பர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
வடசென்னையில் ஏற்கெனவே 3330MW அளவிற்கான அனல்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. விரைவில் 800 MW உற்பத்தித் திறன் கொண்ட மற்றொரு அலகு செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த நிலையில் மேலும் புதிதாக 660MW அனல்மின் நிலையத்தை அங்கு அமைக்க தமிழக அரசு முயன்று வருகிறது. இது தமிழக அரசின் முயற்சி மட்டுமல்ல, தேசிய அளவில் வளர்ந்து வரும் மின் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் அனல்மின் நிலையங்கள் அவசியம் என்று உணரப்பட்டிருக்கிறது. இதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. தமிழகத்தில், மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு முயன்று வருகிறது. எல்லாம் சரிதான் ஆனால், இங்குள்ள மக்களின் வாழ்க்கை சூழல் குறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், அதற்கு வாய்ப்பு இல்லாதபட்சத்தில் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
இந்நிலையில் அரசு எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை வேகப்படுத்தி வருகிறது. சென்னை மக்கள் தொகை பெருக்கத்தைக் கணக்கில் கொண்டு அதை விரிவாக்க என்று ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்பி., சட்டமன்ற உறுப்பினர்கள் அதனை ஆதரித்து வருகின்றனர். இன்று இந்த விரிவாக்கத் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் சீமான் பங்கேற்றுப் பேசினார். பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அனல், புனல், அணு, நிலக்கரி என இப்படி எல்லா மின் உற்பத்தி திட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கானது என்றும் வேலை வாய்ப்புக்கானது என்று சொல்லியே கொண்டுவந்துள்ளார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்கும் போது இனிப்பாக இருக்கிறது. மின்சாரம் இல்லாமல் எப்படி நாடு வளரும் என்கிறார்கள். மின்சாரம் தயாரிக்க இந்த அனல்மின் திட்டம், அணுமின் திட்டம்தான் இருக்கிறது. அதைவிட்டால் வேறு வழியே கிடையாது எனச் சொல்வதை நாங்கள் மறுக்கிறோம். அணு உலைக்கு மீது அமர்வதும் அணு உலைக்கு அருகில் குடியிருப்பதும் இரண்டும் ஒன்றுதான் என அணு விஞ்ஞானிகளே சொல்கிறார்கள். அதை நாம் அனுமதித்து விட்டோம். அனல்மின் திட்டத்தால் உலர் சாம்பல் பரவி நிலம் எவ்வளவு நாசமாக்கப்பட்டுள்ளது என்பதை நேரடியாகப் போய் ஆய்வு செய்வோம் வாருங்கள். இப்படி உணவு, நீர், நிலம் எல்லாம் நஞ்சான பிறகு மின்சாரம் தரும் விளக்கு வெளிச்சத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்? பிணத்தை வைத்துக் கொண்டு அழவேண்டும். ஆகவேதான் ஜப்பான், ஆஸ்திரேலியா, அரபு நாடுகளில் கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள். சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கிறார்கள். அதை உங்களால் செய்ய முடியாதா?
நெய்வேலி நிலக்கரிக்கான நிலம் கொடுத்தவர் ஜம்புலிங்க முதலியார். அங்கேதான் காமராஜர் நிலக்கரி சுரங்கம் எடுக்கத் திட்டம் வகுத்தார். இன்றைக்கு 60 ஆயிரம் ஏக்கரை நெய்வேலியில் எடுத்துள்ளார்கள். நிலம் நமது. அதன் வளம் நமது. ஆனால், சமீபத்தில் வேலைக்கு எடுத்த 299 பேரில் ஒருவர்கூட தமிழர் இல்லை. ஒருநாள் நிலக்கரி வளம் தீர்ந்துபோகும். அப்போது இந்த அரசு என்ன செய்யும். ஆனால், என்றும் தீராத வளம்தான் காற்றாலை, சூரிய ஒளி, கடல் அலை. அதிலிருந்து ஏன் மின்சாரம் தயாரிக்க அரசு மறுக்கிறது? இதை வைத்து இயற்கைக்கு கேடு வராமல் மின்சாரம் தயாரிக்க முடியும். அணு உலை கண்டுபிடிக்கப்பட்டது மின்சாரத் தேவைக்காகவா? அல்லது மின்சாரம் அணு உலை உதவியால் கண்டுபிடிக்கப்பட்டதா? இல்லையே? எனவே இந்த எண்ணூர் அனல்மின் நிலையம் ஆபத்தானது. சுற்றுச்சூழலை கேடாக்கி வருகிறது. அதிலிருந்து வெளியேறும் உலர் சாம்பல் மூச்சுக்காற்றை நஞ்சாக்கி வருகிறது. எனவே அதை விரிவாக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது.
அனல் மின் நிலையத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், வீட்டை அதன் அருகில் கட்டிக்கொள்ளுங்கள். கருத்து கேட்பு கூட்டம் என்பது, சம்பந்தப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் கருத்தை கேட்கும் வகையில் அமைய வேண்டும். ஆனால் நீங்களாக சிலரை அழைத்து வந்து, அவர்கள் உங்களுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கும்போது அதற்கு ஆதரவு கொடுத்து, மக்களின் மனநிலையை கட்டமைக்க கூடாது. இதற்கு கருத்து கேட்பு கூட்டத்தையே நடத்த வேண்டிய அவசியமில்லை. இங்கு வாழ்வதற்கே இடமில்லை. ஆனால், வேலைவாய்ப்பு கிடைக்கும், வாழ்வாதாரம் உயரும் என்றெல்லாம் கூறி ஏன் கருத்துக்களை கேட்கிறீர்கள்? மின் உற்பத்திக்கு மாற்று வழி இருக்கும்போது அதை நோக்கி நகர்வதை விட்டுவிட்டு இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.