அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு ஆளுநர் அனுமதி!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்க துறைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மேற்கோள் காட்டி, பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) 2002-ன் கீழ் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அனுமதி கோரி, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு அமலாக்க துறை கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில், “புதிய மதுபானக் கொள்கையை வடிவமைப்பதிலும், செயல்படுத்துவதிலும் மிகப் பெரிய அளவிலான ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த நவம்பர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி (சிஆர்பிசி), அரசின் முன் அனுமதி பெறாமல், அரசு ஊழியர் ஒருவரை பணமோசடி வழக்கின் கீழ் கைது செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தது. முன்பு, அரசு ஊழியர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குத் தொடர்வதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. அவை சிபிஐ மற்றும் மாநில காவல் துறை போன்ற பிற விசாரணை அமைப்புகளுக்கே கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மதுபான ஊழல் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கடந்த மார்ச் 21 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முறையே சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இந்த இரண்டு வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில், நவம்பர் மாதத்தில் அரவிந்த் கேஜ்ரிவால், அமலாக்க துறையின் ஏழாவது துணை குற்றப்பத்திரிக்கையின்படி விசாரணை நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்யும்படி கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கேஜ்ரிவால் தனது மனுவில், ‘என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் நிகழ்ந்தபோது நான் ஓர் அரசு ஊழியராக இருந்தேன். அதனால் என் மீது வழக்கு தொடர்வதற்கு தேவையான அரசின் முன் அனுமதி இல்லாமலேயே விசாரணை நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொண்டது’ என்று வாதிட்டிருந்தார். இந்த மனுவுக்கு பதில் அளிப்பதற்கான தகவல்களை சேகரிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என அமலாக்கத் துறை கோரியது.

விசாரணை நீதிமன்றமோ, அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு தேவையான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிக்கையை ஜூலை 9-ம் தேதி ஏற்றுக்கொண்டது. அரவிந்த் கேஜ்ரிவல் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீது குற்றம்சாட்டி அமலாக்கத் துறை 200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இந்தப் பின்னணியில் வழக்குத் தொடர அனுமதி கோரிய அமலாக்கத் துறையின் கோரிக்கைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெல்லி அதன் சட்டப்பேரவைக்கு தேர்தலை சந்திக்க உள்ளது. அங்கு தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆம் ஆத்மி கட்சி தயாராகி வரும் நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.