பிரியங்கா காந்தி தேர்தல் வெற்றியை எதிர்த்து நவ்யா ஹரிதாஸ் வழக்கு!

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கேரளாவின் வயநாடு தொகுதிக்கு கடந்த நவம்பர் 13-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ், 5,12,399 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியுள்ளதாவது:-

பிரியங்கா காந்தி வத்ரா தனது வேட்பு மனுவில் ​​தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் சொந்தமான பல்வேறு சொத்துக்கள் தொடர்பான முக்கிய தகவல்களை மறைத்துவிட்டார். தவறான தகவல்களை அளித்ததன் மூலம், பிரியங்கா காந்தி வத்ரா வாக்காளர்களை தவறாக வழிநடத்தியுள்ளார். உண்மைத் தகவல்களை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள முடியாதவாறு மறைத்துள்ளார். இது வாக்காளர்களின் விருப்பத்தை பாதிக்கும் நோக்கம் கொண்டது.

1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, பிரியங்கா காந்தி வத்ரா பல சந்தர்ப்பங்களில், வாக்காளர்கள் மீது தேவையற்ற செல்வாக்கு செலுத்தி உள்ளார், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் பிரியங்கா காந்தி வத்ராவின் வேட்பு மனு, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் விதிமுறைகளின் கீழ் உள்ள ஆணைகளை மீறியதாகிறது. எனவே, அவரது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் நவ்யா ஹரிதாஸ் தரப்பில் வழக்கறிஞர் ஹரி குமார் நாயர் ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.