பணியில் இருக்கும் காவலர்கள், பணியைவிட செல்போனில் மூழ்கிக்கிடக்கின்றனர்: உயர்நீதிமன்றம்!

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கவனக்குறைவாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி நகரின் மையப் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்ற இளைஞர் நேற்று பட்டப்பகலில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்ற வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களையும் மீறி இந்தப் படுகொலை நடந்திருந்தது. மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் வரும் அனைவரும் தீவிர ஆய்வுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், காவல்துறையின் சோதனையையும் மீறி கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே வந்தது எப்படி? அப்படியானால், காவல்துறையினர் கவனக்குறைவாக இருந்தார்களா? அல்லது கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே நுழைவதை காவல்துறையினரே கண்டும் காணாமலும் விட்டுவிட்டார்களா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. கொலை நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

இப்படி இருக்கையில், சம்பவம் நடந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதேநேரம் கவனக்குறைவாக இருந்த போலீசார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கொலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் பி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு இன்று வந்தது. விசாரணையின்போது கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜே.ரவிந்திரன் மற்றும் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி சீல் வைக்கப்பட்ட அறிக்கையை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தனர். அதேபோல சம்பவத்தின்போது காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த வீடியோ காட்சிகளையும் அவர்கள் நீதிபதியின் முன்பு சமர்பித்தனர். மேலும் ஏற்கெனவே மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிக்காட்டுதலின் அடிப்படையில், அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் ஆய்வை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினர்.

இதனையடுத்து வீடியோவை பார்த்த நீதிபதிகள், “ஒரே ஒரு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மட்டுமே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடிக்க முயன்றிருக்கிறார். மற்ற காவலர்கள் என்ன செய்துக்கொண்டிருந்தனர்? எதற்காக கொலை நடந்தது என்பதை விட, கொலை நடந்த இடம்தான் கவலை அளிக்கிறது. நீதிமன்ற வளாகத்திலேயே இதுபோன்ற சம்பவம் நடந்தால், சாட்சியளிக்க எப்படி வருவார்கள்? பணியில் இருக்கும் காவலர்கள், பணியைவிட செல்போனில் மூழ்கிக்கிடக்கின்றனர்” என்று வேதனை தெரிவித்துள்ளனர்.