வெள்ள பாதிப்புக்கு அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம்: சிவி சண்முகம்!

விழுப்புரம், கடலூர், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு திமுக அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என சிவி சண்முகம் எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் நகராட்சித்திடலில் அதிமுக சார்பில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீடு தொகையை உடனே வழங்கக்கோரி இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளரான சிவி சண்முகம் எம்பி பேசியதாவது:-

முன்னாள் முதல்வர் பழனிசாமி விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளபாதிப்புகளை பார்த்து மக்களுக்கு ஆறுதல் சொல்லி சென்ற மறுநாள் முதல்வர் வந்து சென்றார். அதன் பின் துணை முதல்வர் வந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு ரூ 2 ஆயிரம் வழங்கிய அரசு சென்னையில் உள்ள மக்களுக்கு ரூ 6 ஆயிரம் வழங்கியது தமிழக அரசு. விழுப்புரம், கள்ளகுறிச்சி, கடலூர் மாவட்டத்தில் விவசாயம்தான் பிரதான தொழில். சென்னையில் ஆட்டோ ஓட்டுநருக்கும், ஐஏஎஸ் அதிகாரிக்கும் ரூ,6 ஆயிரம். ஆனால் இங்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ளவர்களுக்கு இரண்டு வாக்கு உள்ளதா? இங்குள்ள மக்கள் கேவலமாக தெரிகிறார்களா? அமைச்சர், எம்எல்ஏ செல்லும் கிராமங்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வெள்ள நிவாரண கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது என்று முதல்வருக்கு தெரியவில்லை. அதிகாரிகள் சொல்வதை அப்படியே நம்புகிறார். வெள்ளம் சூழ்ந்த பகுதிக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் மட்டுமே திட்டமிடப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டது. நாங்கள் ஆறுதல் சொன்ன கிராமங்களுக்கு சென்றபோது ஒரு அரசு அதிகாரியும் இல்லை. முதல்வர், துணை முதல்வருக்கு அதிகாரிகள் பாதுகாப்பு கொடுப்பதற்கே அங்கு குழுமினர். இந்த அரசு கோமாவில் உள்ளது. வெள்ளபாதிப்பு ஏற்பட்டதற்கு காரணம் நிர்வாக திறமையின்மைதான். நள்ளிரவு 12.45 மணிக்கு 1.68 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டதாக அறிவித்துவிட்டு 3 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு வட்டாட்சியருக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக இம்மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். அதிமுக ஆர்பாட்டம் அறுவித்த பின்பு ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வெள்ள நிவாரணமாக ரூ.102 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். தமிழக அரசு ரூ1863.52 கோடி மத்திய அரசிடம் கேட்டுள்ளது. ஆனால் பாதிப்பு என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ரூ.182 கோடி செலவிடப்பட்டுள்ளது. விவசாயிகளை காட்டி மத்திய அரசை இந்த அரசு ஏமாற்ற முயல்கிறது. இந்த அரசில்தான் விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். விவசாயிகள்மீது கைவைத்த எந்த அரசும் பிழைத்ததில்லை. ஆட்சியர் அறிவித்த முழு தொகையை இந்த அரசு வழங்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.