வருங்கால தலைமுறைக்கு மிகப்பெரிய துரோகத்தை திமுக அரசு செய்து வருகிறது. இதனால் வருங்கால தலைமுறைக்கு மிகப்பெரிய துரோகத்தை திமுக அரசு செய்து வருகிறது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கோவையில் மகளிருக்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:-
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் கடன் உதவி வழங்குகின்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. திமுகவின் செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசை குற்றம் சாட்டி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புயல் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கவில்லை, டங்ஸ்டன் சுரங்கத்துக்கு பாஜக துணை நிற்கிறது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். மத்திய அரசின் திட்டத்துக்கு மாநில அரசு முதலில் ஒப்புதல் வழங்கிவிட்டது. பிறகு அதை நடைமுறைப்படுத்தும் போது திட்டத்தை எதிர்க்கிறார்கள். விஸ்வகர்மா யோஜனா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிக்கும் திட்டம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது அதே திட்டத்தை கைவினை கலைஞர்கள் திட்டம் என அமல்படுத்துகிறார்கள். எந்தப் பெயராக இருந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் இதில் பலனடைய வேண்டும் என்பதே எங்களது விருப்பம். விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் சர்வதேச சந்தையில் கைவினை கலைஞர்களின் பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
நவோதயா பள்ளிகளில் இந்தி கட்டாயம் இல்லை என மத்திய அரசு கூறிவிட்டது. இருப்பினும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறக்க மறுக்கின்றனர். திமுக அரசு தங்களது சுய லாபத்துக்காக தமிழ்நாட்டை தனி தீவாக உருவாக்கி வருகிறது. இதனால் வருங்கால தலைமுறைக்கு மிகப்பெரிய துரோகத்தை திமுக அரசு செய்து வருகிறது. இவற்றையும் தாண்டி பல திட்டங்களை மாநில அரசு கேட்காமலே மத்திய அரசு நேரடியாக தமிழகத்துக்கு வழங்கியுள்ளது.
பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விட மக்கள் பிரச்னைகள் மீது கவனம் செலுத்தி திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக சீர்குலைந்துள்ளது. சாத்தனூர் அணை படிப்படியாக திறக்கப்பட்டதற்காக பாராட்டு விழா நடத்தப்படுகிறது. ஆனால் சாத்தனூர் அணை திறந்த போது மக்கள் தத்தளித்ததை நாம் பார்த்தோம். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசுவதற்கு கூட சபாநாயகர் அனுமதிக்க மறுக்கிறார். இதுவா இவர்களின் ஜனநாயகம். இது போன்ற எத்தனை பொய் குற்றச்சாட்டுகளை பாஜகவின் மீது சுமத்தினாலும், வரும் 2026 தேர்தலில் மக்கள் திமுகவிற்கு சரியான மதிப்பெண்களை வழங்குவார்கள்.
200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதில் இரண்டு பூஜ்ஜியங்களை நீக்கினால் உள்ள தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெறும் நிலை உள்ளது. திமுக அலை எங்கு வீசுகிறது என 2026ல் பார்ப்போம். கேரளாவிலிருந்து மருத்துவ கழிவு கழிவுகளை தமிழகத்தில் கொட்டும் பிரச்னை நெல்லை போன்று கோவை மாவட்டத்திலும் உள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் கவனமாக கண்காணித்து தடுக்க வேண்டும். தமிழகம் கழிவுகளை கொட்டும் குப்பைத்தொட்டி அல்ல. இது குறித்து பாஜக மாநில தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பசுமை தீர்ப்பாயம் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேபோல் ஆனைமலை நல்லாறு திட்டம் கேரளா அரசோடு பேசி அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சரே தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு மாநில அரசு உறுதுணையாக இல்லை. இதனால் ஆனைமலை நல்லாறு திட்டத்தால் பயனடைய கூடிய கோவை மற்றும் ஈரோட்டை சேர்ந்த மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். பெரியார் சிலை திறப்பிற்காக கேரளா செல்லும் முதல்வர் இது போன்று தமிழக மக்களின் பிரச்னைகள் குறித்தும் கேரளா அரசிடம் பேச வேண்டும். குறிப்பாக சிறுவாணி அணையின் பராமரிப்பு மிக மோசமாக உள்ளது. மழை பெய்யும்போது நீரின் அளவு குறைக்கப்படுகிறது. இதையெல்லாம் கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.