குவைத் நாட்டின் மிக உயரிய விருதான “ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்” விருதை அந்த நாட்டு அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
குவைத் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அங்குள்ள ஸ்பிக் தொழிலாளர் முகாமுக்குச் சென்று இந்திய தொழிலாளர்களுடன் கலைந்துரையாடினார். அப்போது, நாட்டுக்கு அவர்கள் அளித்து வரும் பங்களிப்பைச் சுட்டிக்காட்டினார். தொழிலாளர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி கூறியதாவது:-
நான் வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 பற்றி பேசுகிறேன். ஏனென்றால், வேலைக்காக இங்கு வந்துள்ள எனது நாட்டின் தொழிலாளர் சகோதரர்கள், அவர்களுடைய சொந்த கிராமத்தில் எவ்வாறு ஒரு சர்வதேச விமானநிலையத்தை உருவாக்குவது என்று நினைக்கிறார்கள். இந்த சிந்தனை தான் நமது நாட்டின் பலம்.
நமது விவசாயிகள் எவ்வளவு கடினமாக வயல்களிலும், பணியிடங்களிலும் வேலை செய்கிறார்கள் என நாள் முழுவதும் நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். அவர்களுடைய கடின உழைப்பு என்னை உத்வேகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அவர்களின் கடின உழைப்பை நான் பார்க்கும் போது, அவர்கள் 10 மணி நேரம் வேலை செய்தால் நான் 11 மணி நேரமும், அவர்கள் 11 மணி நேரம் வேலை செய்தால் நான் 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன். நீங்கள் உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக கடினமாக உழைக்கிறீர்களா இல்லையா? நானும் என் குடும்பத்தினருக்காக கடினமாக உழைக்கிறேன். எனது குடும்பத்தில் 140 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதனால் நான் கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டும்.
இந்தியாவில் இப்போது மிகவும் மலிவு விலையில் இணைத் தரவுகள் கிடைக்கின்றன. உலகின் எந்த மூலைக்கோ அல்லது இந்தியாவுக்குள்ளேயோ மிகக்குறைந்த செலவில் நாம் இப்போது ஆன்லைனில் பேச முடியும். நீங்கள் வீடியோ கான்ஃபரன்சிங் பேசினாலும் அதற்கான செலவும் மிகவும் குறைவு. மக்கள் தினமும் அவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசுவது மிகப்பெரிய வசதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், குவைத் நாட்டின் மிக உயரிய விருதான “ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்” விருதை அந்த நாட்டு அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
இரண்டு நாள் பயணமாக மோடி குவைத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் தனது உயரிய விருதான “ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்” விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இது பிரதமர் மோடிக்கு ஒரு நாடு அளிக்கும் 20 ஆவது சர்வதேச கௌரவம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பின் அடிப்படையில் ஒரு நாட்டின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாளமாக இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் போன்ற வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.