மத்திய அரசு பொங்கல் விழா நாட்களில் யுஜிசி நெட் தேர்வு நடத்துவதா?: கி.வீரமணி கண்டனம்!

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நாட்களில் யுஜிசியானது நெட் தேர்வு நடத்த கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தி.க. தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழர் திருநாளாம் பொங்கலும் அதையொட்டி அடுத்த இரண்டு நாள்களும் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாள்கள்; பொங்கல் மதச்சார்பற்ற உழைப்பாளர்கள், உழவர்களின் திருவிழாக்கள்! ஆரியப் பார்ப்பனர்களின் அடையாளத் திணிப்புக்குள் அடங்காத நாள்கள். தை முதல்நாளை ஒட்டி 2025-ஆம் ஆண்டு ஜனவரி 14,15,16 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டிலும், பிற நாடுகளிலும் வசிப்பவர்கள் கூட, தம் சொந்த ஊர்களுக்குச் சென்று பண்பாட்டை நினைவுகூர்ந்து மகிழத் திட்டமிட்டுள்ளார்கள்.

ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நடத்தும் தேசியத் தகுதித் தேர்வுகளுக்கான (NET) கால அட்டவணையை வெளியிட்டுள்ள தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) அதில் ஜனவரி 15,16 ஆகிய தேதிகளிலும் தேர்வுகளை அறிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான இருபால் தமிழ் இளைஞர்கள் எழுதக் கூடிய தேர்வைத் தமிழர்களின் திருநாள் மகிழ்வைக் கொண்டாட முடியாமல் இடையூறு செய்யும் வகையில் திட்டமிடுவது கண்டிக்கத்தக்கதாகும். தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகளை மடைமாற்ற, தடையேற்படுத்தத் தொடர்ந்து இத்தகைய செயல்களில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருகிறது. இதுவும் அத்தகைய ஒன்றே ஆகும்.

2023-இல் இதே நாள்களில் வங்கித் தேர்வுகளை அறிவித்தனர். 2025-க்கே சி.ஏ. தேர்வுகளை அறிவித்து கண்டனத்திற்குள்ளாகியும் உள்ளது பா.ஜ.க. அரசு! ஆனாலும், தமிழர்களின் குரல்களைக் கேட்க மனமின்றி தொடர்ந்து, இத்தகைய பண்பாட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது கண்டிக்கத்தக்கது. இத் தேர்வு அட்டவணை உடனடியாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.