கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டியில் கூறுகையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையில், தமிழக எம்.பி.க்களுடன் ஒன்றிய கல்வித் துறை அமைச்சரை சென்று சந்தித்தோம். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுங்கள், அரை மணி நேரத்தில் நிதியை விடுவிக்கிறோம் என்று கூறினார். இதற்கு என்ன அர்த்தம். தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சாதனைகளை, செயல்பாடுகளை நாங்கள் பணிவான முறையில் எடுத்துரைத்தோம். அதற்கு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நான் ஹிந்தி பேசாத ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவன். நானே இதைச் சொல்கிறேன். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார். அப்போது, எங்களுடைய மாநிலத்திற்கு என்று ஒரு சில உணர்வுகள் இருக்கின்றன. அண்ணா காலத்தில் இருந்து நாங்கள் இருமொழிக் எங்கள் கொள்கையைத் தான் பின்பற்றி வருகிறோம். எங்களுடைய பள்ளிக் குழந்தைகள் இன்று உலகளவில் சென்று வருகின்றனர். நுழைவுத் தேர்வுகள் அனைத்திற்கும் பள்ளிகளிலேயே பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவை அனைத்தையும் ஒப்பீடு செய்து பாருங்கள். அதேபோல, பல தொழில்நுட்பங்களை பள்ளிக் கல்வித் துறைக்காக கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறினார்.
இந்நிலையில், கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்பில் மகேஷ் கூறியுள்ளதாவது:-
மத்திய அரசிற்கு முன்மாதிரியாக கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் மத்திய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு வகைகளிலும் கல்வியில் சாதனை புரியும் நமது மாணவச் செல்வங்களையும், ஆசிரியப் பெருமக்களையும் மத்திய அரசு ஏமாற்றி வருகின்றது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எங்கள் பிள்ளைகளையும் ஆசிரியப் பெருமக்களையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மாணவர்களுக்கு என்ன மாதிரியான அறிவுசார் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு எடுத்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.