பிரபல கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. சச்சின் டெண்டுல்கரின் சிறுவயது நண்பர் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருமான வினோத் காம்பிளி, தற்போது போதை பழக்கத்தால் உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்திய அணிக்காக 17 டெஸ்ட், 104 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள வினோத் காம்பிளி இதுவரை நான்கு முறை டெஸ்டில் சதம் அடித்திருக்கிறார். இதில் இரண்டு இரட்டை சதம் அடங்கும். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து இரண்டு இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை வினோத் காம்பிளிக்கு உள்ளது. எனினும் வினோத் காம்பிளி ஒழுக்கமின்மை மற்றும் போதை, மது, மாது போன்ற பழக்கத்தில் சிக்கியதால் அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் கிரிக்கெட்டில் நாட்டம் இல்லாததால் அவர் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் வினோத் காம்பிளி பொருளாதார ரீதியாகவும் சரிவை சந்தித்தார்.
இந்த நிலையில் வினோத் காம்பிளி அண்மையில் தன்னுடைய பயிற்சியாளர் ராம்கண்ட் அர்ச்சேக்கரின் நூறாவது பிறந்தநாள் விழாவில் சச்சின் உடன் கலந்து கொண்டார். அப்போது வினோத் காம்பிளியின் உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வினோத் காம்பிளி தானேவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. வினோத் காம்பிளியின் உடல் நலத்தில் திடீர் சரிவு ஏற்பட்டது. தற்போது அவர் உடல் நலம் சீராக இருந்தாலும் ஆபத்தான நிலையிலே இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
வினோத் காம்பிளிக்கு சிறுநீர் தொற்று பிரச்சனை இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இதயத்தில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. வினோத் காம்பிளிக்கு உதவ தயார் என அண்மையில் கவாஸ்கர் உள்ளிட்டோர் அறிவித்திருந்தனர். போதை பழக்கத்தில் இருந்து மீண்டு உடல் தகுதியை பெற முயற்சி செய்கிறேன் என்று கூறியிருந்த நிலையில் தற்போது அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.