திராவிட மாடல் திமுக ஆட்சியில் தந்தை பெரியார் நினைவு ஊர்வலத்துக்கு தடை?: திருமுருகன் காந்தி!

தந்தை பெரியாரின் 51-வது நினைவு தின ஊர்வலம் நடத்த காஞ்சிபுரத்தில் போலீசார் தடை விதித்துள்ளதற்கு பெரியாரிஸ்டுகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். தந்தை பெரியார் வழியில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் திமுக ஆட்சியில் தந்தை பெரியார் நினைவு தின ஊர்வலத்துக்கு காஞ்சிபுரம் போலீசார் அனுமதி மறுப்பதா? எனவும் பெரியாரிஸ்டுகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழ்நாடு இன்று இந்திய மாநிலங்களிலேயே மிகப் பெரிய முன்னேற்றப் பாய்ச்சலில் இருப்பதற்கு காரணமே திராவிடர் இயக்கம்தான். திராவிடர் இயக்கத்தினரின் அளப்பரிய தியாகங்களால்தான் தமிழ்நாட்டு மக்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளைப் பெற முடிந்தது. இத்தகைய திராவிடர் இயக்கத்தின் பெருந்தலைவர் தந்தை பெரியார். இதனால்தான் இந்த மண்ணை பெரியார் மண் என அழைக்கின்றனர். பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரி­யாரின் 51வது நினைவு நாளான இன்று சென்னை, அண்ணா சாலை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள தந்தை பெரி­யார் திரு­வு­ரு­வச் சிலைக்கு தமிழ்­நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளார். பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

காஞ்சிபுரத்தில் பழங்குடி மக்களிடையே சேவையாற்றும் காஞ்சி மக்கள் மன்றத்தினர், தந்தை பெரியார் நினைவு நாள் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென காஞ்சிபுரம் போலீசார் இந்த ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தனர். இந்த அனுமதி மறுப்பு கடிதத்தை காஞ்சி மக்கள் மன்றத்தின் அலுவலகத்தில் நேற்று இரவு போலீசார் ஒட்டினர். இதற்கு காஞ்சி மக்கள் மன்ற நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். ஆனாலும் போலீசார் அனுமதி தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து காஞ்சி மக்கள் மன்றத்தினர் போலீசாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்ப அங்கு பதற்றம் ஏற்பட்டது.

காஞ்சிபுரத்தில் தந்தை பெரியார் நினைவு நாள் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி மறுத்திருப்பது பெரியாரிஸ்டுகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மே 17 இயக்கத்தின் நிர்வாகி திருமுருகன் காந்தி கூறுகையில், அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சியில் தந்தை பெரியார் நினைவு ஊர்வலத்திற்கும் அனுமதியில்லை. ஓரிரு நாட்களுக்கு முன் தமிழ் மொழியில் கடைகளின் பெயர்களை வைக்கச்சொல்லி பரப்புரை செய்தவர்களை தடுத்து சிறையில் தள்ளியுள்ளது காஞ்சி காவல்துறை. ‘திமுக அரசு’ என்ன செய்துகொண்டிருக்கிறது? காஞ்சிபுர மாவட்ட திமுக என்ன செய்கிறது? என கேள்வி எழுப்பி உள்ளார்.