கிறிஸ்துமஸ் திருநாள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழக தலைவர்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:-
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற வன்முறையைத் தவிர்த்து, “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள்” என்று பொறுமையையும், “ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால் அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள்” என ஈகையையும், “பகைவர்களையும் நேசியுங்கள்” எனக் கூறி இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பையும் விதைத்தவர் இயேசு பெருமான். போர்களினாலும், வெறுப்புணர்வினாலும் உலகம் அல்லலுறும் இவ்வேளையில் அவர் காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் மிகவும் தேவையானதாக இருக்கிறது. அத்தகைய அன்பின் பாதையை நெறிதவறாமல் பின்பற்றும் கிறித்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்திலுள்ள சிறுபான்மையின மக்களின் நலனுக்காகத் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போதெல்லாம் சிறுபான்மையினர் நல ஆணையம், பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மையினர் நல இயக்ககம் எனப் பல திட்டங்களை மறைந்த முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வந்துள்ளார். அவரது வழியில் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியிலும்,ஜெருசலேம் செல்வதற்கான நிதியுதவி 60 ஆயிரம் ரூபாயாக உயர்வு. அதுவும் 2024 முதல் நேரடி மானியமாக அதனை வழங்க ஆணை. 8 தொன்மை வாய்ந்த தேவாலயங்களை மறுசீரமைக்க நிதியுதவி. கரூர், மதுரை, தேனியில் கூடுதல் கிறிஸ்தவ மகளிர் உதவி சங்கங்கள் தொடக்கம். தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் மொத்தம் 3 ஆயிரத்து 345 மகளிருக்கு 4.32 கோடி ரூபாய் நிதியுதவி. ஏராளமான கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களுக்குச் சிறுபான்மை அந்தஸ்து. கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம், முதலிய பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
அனைத்து மதத்தவரும், அனைத்து மொழி பேசுவோரும் நல்லிணக்கத்தோடும், சம உரிமையோடும், சமத்துவ மனப்பான்மையுடனும் வாழும் மாநிலமாகத் தமிழகம் திகழ நமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளித்து, அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது:-
அன்பின் திருஉருவமாம், கருணையின் வடிவமாம் தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த திருநாளை, உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கிட, உவகைப் பெருக்குடன் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடி மகிழும் அன்பு கிறிஸ்தவ சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும், எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
“உன் மீது நீ அன்பு செலுத்துவது போல், அடுத்தவர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்” என்று எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த தினத்தை, கிறிஸ்தவப் பெருமக்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, அதனை வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து, வாசலில் நட்சத்திரங்களைக் கட்டி வீட்டினை அழுகுபடுத்தி, புத்தாடை உடுத்தி, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டு, விருந்தினர்களுடன் இனிய உணவு உண்டு, மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
“நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் நாம் செய்ய வேண்டும்.” என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில், எனது இதயமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளதாவது:-
இன்றைய பாஜக ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காகவே மதமாற்றத் தடைச் சட்டம், பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டிருக்கிறது. இதன்மூலம், கிறிஸ்தவ சமுதாயம் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, அச்சுறுத்தப்படுகிற சூழல் உருவாகியிருக்கிறது. கிறிஸ்தவ சமுதாயத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதில் ராகுல்காந்தி எப்போதுமே முன்னணிப் பங்கு வகித்து வருகிறார்.
கிறிஸ்தவ சமுதாயத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வது தான் முதன்மை நோக்கமாகும். ஆனால், அதற்கு மாறாக மக்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது. 1951 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிறிஸ்தவ சமுதாயத்தினர் 2.5 சதவிகிதம் இருந்ததை விட 2024 இல் மக்கள் தொகை பெருகவில்லை என்பதை புள்ளி விவரங்கள் எடுத்துக் கூறுகின்றன. இயேசு பிரானின் போதனைகளை சிரமேற்கொண்டு அதன்படி அனைத்து மத மக்களையும் சகோதர மனப்பான்மையோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் மக்கள் பணியாற்றுகிற கிறிஸ்தவ சமுதாயத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். எனவே, மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது:-
எதிரிகளை மன்னிப்பதற்குக் கற்றுக் கொடுத்த மகான் இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘நண்பர்களிடம் மட்டும் அன்பு காட்டினால் போதாது. எதிரிகளிடமும் அன்பு காட்ட வேண்டும். மனதார மன்னிக்க வேண்டும். யாராவது உங்கள்மேல் கோபமாக இருந்தால், உடனடியாக அவரிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதேபோல் நீங்கள் அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டுமென போதித்தவர் இயேசுபிரான்.
கிறித்துமஸ் கொண்டாடப்படுவதன் நோக்கங்களில் முதன்மையானவை மனிதருக்குள் நல்லுறவும், சமத்துவமும், ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் உண்டாக வேண்டும்; பூமியில் உள்ளவர்கள் இணக்கமான சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்; ஏழை, எளிய மக்கள் புதுவாழ்வு பெற வேண்டும்; இயற்கையை சுரண்டாமல் இசைந்து வாழும் தன்மை ஏற்பட வேண்டும் என்பன உள்ளிட்டவையாகும். இந்த நோக்கங்களுக்காகவே கிறித்துமஸ் திருநாளை மாதத்திற்கு ஒருமுறை கூட கொண்டாடலாம்.
உலகில் இன்று பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது; தொழில்நுட்பம் நாலுகால் பாய்ச்சலில் விரைந்தோடிக் கொண்டிருக்கிறது; மனிதர்களும் பணத்தையும், பொருளையும் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகில் அமைதிக்கும், மக்களிடையே மகிழ்ச்சிக்கும், சமூகங்களில் நிம்மதிக்கும் தான் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த சிக்கலுக்கு சிறந்தத் தீர்வு அனைவரிடத்தும் அன்பு செலுத்துவது தான்.
இயேசுபிரான் விரும்பியதைப் போல, உலகில் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துங்கள். அதன் மூலம் உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்; போட்டி பொறாமைகள் அகல வேண்டும்; ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்; உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்தநாளில் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது:-
அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்பதை போதித்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் இயேசுபிரான் அன்பு காட்டினார். உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். தமது வாழ்நாளின் கடைசி நொடி வரை அன்பையும், கருணையையும் காட்டியது மட்டுமின்றி, எதிரிகளுக்கு மன்னிப்பையும் வழங்கினார்.
இன்றைய உலகுக்கு தேவை பொருளாதார வலிமையோ, படைபலமோ அல்ல. மாறாக அவற்றை விட மிகவும் சக்தி வாய்ந்த அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை தான். இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும் தான் உலகம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஆகும். இயேசுவின் கொள்கைகள் மட்டுமின்றி அவற்றை பின்பற்றுவோரும் வெற்றி பெறுவது உறுதி.
உலகில் அனைவரும், அனைவரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும். பொருளாதாரத்திலும், கணிதத்திலும் பத்தும், பத்தும் நூறு என்றால், அன்பு செலுத்துவதில் பத்தும், பத்தும் பத்தாயிரம் ஆகும். எனவே, அனைவரும், அன்பு, உதவி, கருணை, சகோதரத்துவம், மகிழ்ச்சி, நல்லிணக்கம், கருணை ஆகியவற்றை அனைவருக்கும் வாரி வழங்குவோம். அவை பல்கிப் பெருகி இந்த உலமே அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்டவற்றால் நிறையட்டும் என்று கூறி அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை கிறித்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.