திராவிட கட்சிகள் பெரியாரின் கொள்கையை முழுமையாக பின்பற்றவில்லை: கே.பாலகிருஷ்ணன்!

பெரியாரின் வழிவந்த திராவிடர் இயக்கங்கள் தான் அரை நூற்றாண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. ஆனாலும் தமிழகத்தில் சாதிய ஆணவ கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகிறது என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சாதிய ஆதிக்க சக்திகளுக்கு சமாதி கட்டிய நபராக திகழ்ந்தவர் தந்தை பெரியார். சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக தனது வாழ்நாள் முழுவதும் போராட்டம் நடத்தியவர். பகுத்தறிவு சிந்தனையை பரப்பி பெண்ணடிமை கூடாது என மறுத்தவர். பெரியாரின் வழிவந்த திராவிடர் இயக்கங்கள் தான் அரை நூற்றாண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. ஆனாலும் தமிழகத்தில் சாதிய ஆணவ கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. சாதிய கொலைகள் அதிக அளவில் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சாதிய உணர்வுகளும் சாதிய அணிசேர்க்கையும் கொடி கட்டி பறக்கின்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தலித்துகள் மீதான தாக்குதலும் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. அன்றாடம் தலித் மக்களுக்கு கொடுமைகளை இழைக்கின்ற மாநிலமாக தமிழகம் உள்ளது.

பெரியாரின் கொள்கைகளை திராவிட கட்சிகள் முழுமையாக பின்பற்றவில்லை. அவரது கருத்தில் இருந்து திராவிட கட்சிகள் நழுவி விட்டனர். மீண்டும் பெரியாரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார்.