டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்​.ர​வியின் பதவிக் ​காலம் கடந்​தாண்டு முடிவடைந்த நிலை​யில், பதவி நீட்​டிப்பு செய்​யப்​படவில்லை. விதி​கள்படி புதிய ஆளுநர் பதவி​யேற்​கும் வரை, ஏற்கெனவே உள்ள ஆளுநர் தொடர்வார் என்பதால், அவர் ஆளுநராக உள்ளார். இந்நிலை​யில், நேற்று முன்தினம் ஆளுநர் ரவி டெல்லி புறப்​பட்டுச் சென்​றார். அவருடன் ஆளுநரின் செயலர், பாதுகாப்பு அலுவலர்கள் சென்​றுள்​ளனர். தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்​.ர​வியின் திடீர் டெல்லி பயணம் முககியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா, திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார் உள்பட பல பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. அவர்களை தேர்வுசெய்ய அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்களில் யுஜிசி உறுப்பினர் இல்லாததால் அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசை ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இந்த பின்னணியில் ஆளுநரின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார்.