ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராட வருபவர்கள் அருகில் உள்ள தனியார் உடை மாற்றும் அறைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த அறையில் ரகசிய கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இனி மாதம் ஒரு முறை விடுதிகள், தனியார் உடை மாற்றும் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்படும் என டிஎஸ்பி சாந்தமூர்த்தி கூறியுள்ளார்.
இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாக ராமேஸ்வரம் கோயில் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது நாட்டின் பல மூலைகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் பலர் இங்கு வந்து செல்கின்றனர். இப்படி வருபவர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். நீராடி முடித்த பின்னர் அருகில் உள்ள தனியார் உடை மாற்றும் அறைகளில் உடைகளை மாற்றிக்கொள்கின்றனர். இதற்காக ஏராளமான அறைகள் இருக்கின்றன. கடை வைத்திருப்போர், ஹோட்டல் வைத்திருப்போர் என பல்வேறு தரப்பினரும் இதுபோன்ற அறைகளை வாடகைக்கு விட்டு வருகின்றனர். இதில் ஒன்றுதான் லட்சுமி டீ ஸ்டால் கடையை ஒட்டியுள்ள உடை மாற்றும் அறை.
இன்று காலை அக்னி தீர்த்த கடலில் நீராடிய பெண் பக்தர் ஒருவர் லட்சுமி டீ ஸ்டாலுக்கு சொந்தமான உடை மாற்றும் அறைக்கு சென்று உடை மாற்ற முயன்றிருக்கிறார். ஆனால் அங்கு அவர் வழக்கத்திற்கு மாறாக எதையோ பார்த்திருக்கிறார். அதாவது, கருப்பு நிறத்தில் கேமரா போன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அதை சோதனை செய்து பார்த்திருக்கிறார். அது கேமராதான் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே இது குறித்து போலீசுக்கு புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து சோதனை செய்து பார்த்தபோது, கழிப்பறை மற்றும் உடை மாற்றும் அறை என மொத்தம் 3 இடங்களில் இருந்த ரகசிய கேமராக்களை பறிமுதல் செய்திருக்கின்றனர். கேமரா குறித்து முதற்கட்டமாக டீ கடையின் உரிமையாளர் ராஜேஷ் கண்ணா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த மீரான் என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் யார் வீடியோவை எடுத்தது? எத்தனை வீடியோக்கள் மொத்தம் இருக்கின்றன? எடுக்கப்பட்ட வீடியோக்கள் சேகரிக்கப்பட்டது எங்கே? யாருக்கெல்லாம் அனுப்பி வைக்கப்பட்டது? வீடியோவை வைத்து பணம் பறித்தலில் ஈடுபட்டார்களா? அல்லது பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? கைது செய்யப்பட்டவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அக்னி கடலில் நீராட வரும் பக்தர்களை நிர்வாணமாக ரகசிய வீடியோ எடுத்த கும்பல் சிக்கியிருப்பது ராமநாதபுரம் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் ராமநாதபுரம் டிஎஸ்பி சாந்தமூர்த்தி, “இனி மாதம் ஒரு முறை விடுதிகள், தனியார் உடை மாற்றும் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.