எம்.ஜி.ஆர்.- நரேந்திரமோடி ஒப்பீடு சரியானதே என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். எம்.ஜி.ஆரை மோடியுடன் ஒப்பிட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவுத் தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை, “டாக்டர் எம்.ஜி.ஆருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே, பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவருமே மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து, தங்கள் நேர்மையாலும், கடின உழைப்பாலும், பொதுமக்கள் மீது கொண்ட அன்பாலும், உயர் பதவிகளுக்குச் சென்றவர்கள். தாங்கள் பட்ட துயரங்கள், வருங்கால சந்ததியினருக்கும் வரக் கூடாது என்பதற்காக, தங்கள் அதிகாரத்தை, ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தியவர்கள்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான் மோடிக்கும் எம்ஜிஆருக்கும். பாஜகவை போல் எம்ஜிஆர் மதரீதியான அரசியல் செய்ததில்லை.அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர் எம்ஜிஆர். பாஜகவின் கொள்கையே மதத்தால் பிரிவினையை தூண்டுவதுதான். எந்த நிலையிலும் எம்.ஜி.ஆருடன் மோடியை ஒப்பிட முடியாது” என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, “எம்.ஜி.ஆர்.- நரேந்திரமோடி ஒப்பீடு சரியானதே. எம்ஜிஆர்-மோடி ஒப்பீட்டை வரவேற்று அதிமுக முக்கிய தலைவர்கள் எனக்கு வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்பி உள்ளனர். ஒப்பீட்டை வரவேற்று அதிமுக தலைவர்கள் பலர் தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்தனர். எம்.ஜி.ஆரும், மோடியும் ஏழ்மை நிலையில் இருந்து வந்து உயர்பதவியை அடைந்தவர்கள். நரேந்திர மோடியின் தாயார் 5 வீடுகளில் பத்துபாத்திரம் தேய்த்து மோடியை வளர்த்தார். எம்ஜிஆர் பாரதத்தின் ரத்னா.. அதிமுகவின் ரத்னா கிடையாது. இந்தியாவைப் பொறுத்தவரை கல்வித் தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். All Pass நடைமுறையை மாநில அரசு அமல்படுத்தாமல் இருக்கலாம்; அது அவர்களுடைய விருப்பம்” இவ்வாறு தெரிவித்தார்.