தமிழ்நாட்டில் காலாவதியான 30 சுங்க சாவடிகளை தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் இழுத்துமூடாமல் இருப்பது ஏன்? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு முழுவதும் சட்டவிதிமுறைகளை மீறி சுங்கச்சாவடிகள் கட்டப்படுவதும் அதில் விதிகளை மீறி மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் அதிகப்படியான அளவில் 70 சுங்கச்சாவடிகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு 67 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வந்த நிலையில், 5.09.2024 அன்றைய அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் 70 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் காலாவதி ஆகிவிட்டதாகவும், பரனூர் உள்ளிட்ட ஐந்து சுங்கச்சாவடிகள் உடனே அகற்றப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதாவது, தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் காலாவதியாகி விட்டதாக ஒரு மாநில அமைச்சரே தெரிவித்திருந்தும், அதனை மூடுவதற்கான எந்தவித நடவடிக்கையும் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் மேற்கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதேபோன்று, சட்டவிரோதமாகச் செயல்பட்ட அந்த சுங்கச்சாவடி உரிமையாளர்கள் மீதோ, சுங்கச் சாவடி உரிமையாளர்களுக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் மீதோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறிப்பாக, நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைக்கு 10 கிலோ மீட்டர் அப்பால் சுங்கச்சாவடி, நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் வழிப்பறிக் கொள்ளைக்காரனாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் எந்த விதிமுறையைப் பின்பற்றுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் எப்போது நிறுவப்பட்டன அவை செய்த செலவினத்தில் எவ்வளவு தொகையை வசூலித்துள்ளன போன்ற தகவல்கள் எதுவும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்காமல், மத்திய அரசும் சுங்கச்சாவடி நிர்வாகமும் சேர்ந்துகொண்டு கூட்டு கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.
சான்றாக, பரனூர் சுங்கச்சாவடி காலாவதியான பின்னரும் கூட சட்டவிரோதமாகக் கூடுதலாக ரூ.28 கோடி வசூல் செய்திருப்பதாக மத்திய அரசின் தலைமை கணக்காயர் அறிக்கையை வெளியிட்டு ஓராண்டுக்கு மேலான பின்னரும் கூட அந்த சுங்கச்சாவடி அகற்றப்படவும் இல்லை. சட்டவிரோதமாகச் செயல்பட்ட அந்த சுங்கச்சாவடியின் உரிமையாளரும், அது தொடர்பான அதிகாரிகளும் கைது செய்யப்படவும் இல்லை. இந்த நிலையில், சிதம்பரம் – கடலூர் இடையே உள்ள கொத்தட்டையில் புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, 23.12.2024 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி கடலூர் மாவட்ட தனியார் பேருந்து, லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோன்று, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் கெங்கரம்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியில், ஜனவரி 3ஆம் தேதியில் இருந்து கட்டணம் வசூலிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான தொகை விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. சுங்கச்சாவடிகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தான், தற்போது தனியார் பேருந்து உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கெங்கரம்பாளையம் மற்றும் கொத்தட்டை புதிய சுங்கச்சாவடி மட்டுமின்றி, எழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எதிரான தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சுங்கச்சாவடிகளையும் இழுத்து மூட, ஜனநாயக சக்திகளும், தனியார் பேருந்து உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள் ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.