அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024 -ந் தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் AWPS ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணை செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
புலன்விசாரணையின் போது, அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன், (37) என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். சந்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பெருநகர சென்னை காவல் துறை அதிகாரிகளும், பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து (Joint Security Review) மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.