டிச.27-ல் அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் போராட்டம்: செல்வப்பெருந்தகை!

அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 27-ந் தேதி தமிழ்நாடு வருகை தரும் போது கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத்தின் மீதான விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை விமர்சித்ததால் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தமது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:-

வரும் 27ஆம் தேதி தமிழ்நாடு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக எனது தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும். ஜனநாயகத்தின் மீதும், இந்திய அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் ஒன்று கூடுவோம். இவ்வாறு செல்வப் பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தர உள்ளார் என்கின்றன தகவல்கள். மறைந்த தேமுதிகவின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் டிசம்பர் 28-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தேமுதிக இதனை குருபூஜையாக நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கக் கூடும் என கூறப்படுகிறது. டிசம்பர் 27-ந் தேதி சென்னை வரும் அமித்ஷா, விஜயகாந்த் நினைவு தின நிகழ்ச்சியில் மட்டுமல்லாது திருவண்ணாமலை சென்று வழிபாடு செய்யவும் இருக்கிறாராம். அதேபோல தமிழ்நாட்டில் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக தலைமை அலுவலகங்களையும் அமித்ஷா திறந்து வைக்க இருக்கிறாராம்.