டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் வெட்ட வெளிச்சமான திமுக நாடகம்: எடப்பாடி பழனிசாமி!

டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கம், திமுக அரசின் பொய்களை, நாடகங்களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது எனவும், ஆனால், இதுவரை எந்த பதிலையும் சொல்லாமல், சட்டமன்றத்தில் ஆ, ஊ என்று அமைச்சர் பதற்றத்தில் பேசியும் , முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின், மடைமாற்ற அரசியலும் மட்டுமே செய்து வந்தனர் என விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப் பகுதிகளில் ஒன்றான அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த முயற்சிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அடுத்து டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. கனிம சுரங்க ஏலம் விட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மறுபரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2024 பிப்ரவரியில் டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் விடும் பணிகள் தொடங்கியது முதல் தமிழகம் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. டங்ஸ்டன் ஏலம் தொடர்பாக 2023 டிசம்பர் 6ஆம் தேதியில் தமிழக அரசின் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், 2024 நவம்பர் 7ஆம் தேதி ஏழமுடிவை அறிவிக்கும் வரை தமிழகத்திடம் இருந்து எதிர்ப்பு வரவில்லை என மத்திய அரசு நேற்று கூறியிருந்தது.

இந்நிலையில், டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கம், திமுக அரசின் பொய்களை, நாடகங்களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது என அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கம், திமுக அரசின் பொய்களை, நாடகங்களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. 03.10.2023 அன்று திமுக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் எழுதிய கடிதத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்காமல், மாறாக, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடும் உரிமை மாநில அரசுக்கே வழங்கவேண்டும் என கோரியுள்ளதை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது.

மேலும், பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு நாயக்கர்பட்டி சுரங்கத்திற்கான நில தரவுகளை அனுப்பிய திமுக அரசு, ஏலம் நடத்த எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், “2024 பிப்ரவரியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் தொடங்கியது முதல் 07.11.2024 அன்று ஏல முடிவு அறிவிக்கும் வரை மாநில அரசிடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் வரவில்லை” என்று மீண்டும் ஒரு முறை மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு இடைப்பட்ட 10 மாதங்களில் ஒருமுறை கூட எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?

இதைத் தான் சட்டமன்றத்திலும், ஊடகங்கள் வாயிலாகவும் தொடர்ந்து நான் சுட்டிக்காட்டி “10 மாதங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அரசாங்கம் தானே நடத்துறீங்க?” என்று விடியா திமுக அரசை நோக்கி கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால், இதுவரை எந்த பதிலையும் சொல்லாமல், சட்டமன்றத்தில் ஆ, ஊ என்று அமைச்சர் பதற்றத்தில் பேசியும் , முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின், மடைமாற்ற அரசியலும் மட்டுமே செய்து வந்தனர். தூங்குபவர்களை எழுப்பலாம்; கும்பகர்ணன் போல் தூங்குவதாக நடிப்பவர்களை எழுப்ப முடியாது! உண்மை மீண்டும் அம்பலப்பட்டு இருக்கிறது. மேலூர் மக்களுக்கு திமுக அரசு இழைத்துள்ள இந்த மாபெரும் துரோகத்திற்கு திரு ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.