அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி கூட்டு பலாத்காரம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் மோசமாகும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு எடுத்துக்காட்டாக மாறி உள்ளது. தமிழ்நாடு முழுக்க இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், டிசம்பர் 23ஆம் தேதி மாலை, மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த பெண்ணுடன் இருந்த ஆண் நண்பரை இரண்டு பேர் தாக்கினர். அதன்பின் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். தகவல்களின்படி, அந்த பெண்ணும் அவரது நண்பரும் அருகிலுள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் கலந்துகொண்டு நள்ளிரவைத் தாண்டி பல்கலைக்கழக வளாகத்திற்குத் திரும்பினர். அவர்கள் வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் இருந்தபோது,​​ 2 மர்ம நபர்கள் அவர்களிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அந்த ஆண் நண்பரைத் தாக்கி, அந்தப் பெண்ணை புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கோட்டூர்புரம் ஜே4 போலீசில் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவு 64 (பாலியல் வன்கொடுமையான் தண்டனை) கீழ் டிசம்பர் 24 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் (ஏசிபி) பாரதிராஜன் மற்றும் அவரது குழுவினர் விசாரித்து வருகின்றனர். போலீஸ் அதிகாரிகள் குழு வளாகத்தில் விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறது. இதுவரை இந்த நடவடிக்கையில் கைது எதுவும் செய்யப்படவில்லை. முக்கியமாக அந்த 2 பேர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மோசமாகும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு எடுத்துக்காட்டாக மாறி உள்ளது. முக்கியமாக மாணவர்கள் இந்த சம்பவத்திற்கு எதிராக போராட்டம் செய்வார்கள் என்றும் அச்சம் எழுந்துள்ளது. வரும் நாட்களில் இந்த பிரச்சனை மிகப்பெரிதாக வெடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அருகிலேயே பல அரசு அலுவலகங்கள் இருக்கும் நிலையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய பழைய பல்கலைக்கழகம் ஒன்றில் இப்படி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இதுவரை இது பற்றி கருத்து தெரிவிக்கவில்லை;. அமைச்சர்கள் யாரும் நேரில் சென்று விசாரணை செய்யவில்லை. முக்கியமாக இதுவரை இந்த நடவடிக்கையில் கைது எதுவும் செய்யப்படவில்லை என்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.